தோல்விகளும் துன்பங்களும் முறியடிக்க – புத்தரின் எளிய போதனை.

Bala

UPDATED: Sep 11, 2024, 8:30:02 PM

புத்தர்

ஒரு கிராமத்தில் தங்கியிருந்த புத்தரைப் பார்க்க தர்ஷன் எனும் இளைஞன் வந்தான். அவன் வயது இருபத்தைந்தே இருக்கும். கண்களில் கண்ணீர், முகத்தில் சோர்வும் துயரமும் தென்பட்டன. 

அவனை பார்த்தவுடன் புத்தர் அன்புடன் கேட்டார், “சகோதரா, ஏன் அழுகிறாய்? என்ன பிரச்சனை உனக்கு? சொல், பகிர்ந்து கொண்டால் மனதுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.”

தர்ஷன் சற்று தயங்கி பின்னர் சொன்னான், “பகவானே, என் வாழ்க்கை முழுவதும் தோல்வி, துன்பம் நிறைந்ததாக இருக்கிறது. எதிலும் வெற்றி கிடைக்கவில்லை. ஆதரவாக யாரும் இல்லை. நான் எப்படி வாழ வேண்டும் என்று தெரியவில்லை. எனக்கு வழி சொல்லுங்கள்.”

புத்தர் அவனை கவனமாகக் கேட்டு, உடனே தன்னுடைய குடிலுக்குள் சென்று சிறிய குவளையில் தண்ணீர் மற்றும் உப்பு கொண்டு வந்தார். அப்போது, தர்ஷன் அதற்கு காரணம் புரியாமல் இருந்தான். புத்தர் அவனுக்கு தண்ணீர் குவளையும் உப்பையும் கொடுத்து, “சகோதரா, இந்த உப்பை தண்ணீரில் கலந்து குடி” என்றார்.

தர்ஷன் உப்பைக் கலந்த தண்ணீரைப் பருகியவுடன், அது மிகவும் கசப்பாக இருந்ததால் அவன் அதை குடிக்க முடியவில்லை. அதை பார்த்த புத்தர் மீண்டும் சிரித்தார், “சரி, இதோ, அதே உப்பைக் கொண்டு குளத்தில் கலக்கிவிடு, பிறகு அதைக் குடித்து பாரு,” என்றார்.

தர்ஷன் அதே உப்பை குளத்தில் கரைத்துவிட்டு நீரைப் பருகினான். இப்போது நீரில் உப்பின் சுவை இல்லை. தற்சன் புரியாமல், “இதற்கான காரணம் என்ன?” என்று கேட்டான்.

புத்தர் மெதுவாகப் புன்னகைத்தார். “வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பங்கள் உப்பைப் போலவே. நம் மனம், தண்ணீரைப் போன்றது. மனம் குறைவாக இருந்தால், துன்பங்கள் மிகுதியாகத் தோன்றும். ஆனால் மனதைப் பெரிதாக்கினால், அந்த துன்பங்கள் குளத்தில் கரைந்த உப்பைப் போலக் காணாமல்போய்விடும்.”

தர்ஷன் புரிந்து கொண்டு புத்தருக்கு வணக்கம் சொல்லி மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றான்.

 

VIDEOS

Recommended