- முகப்பு
- சிறப்பு கட்டுரை
- அரசியலும், சமூக இயலும்” - எழுதுவது சஹீட் முகம்மத் ரிஸ்மி
அரசியலும், சமூக இயலும்” - எழுதுவது சஹீட் முகம்மத் ரிஸ்மி
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Oct 19, 2024, 5:13:22 AM
அரசியல் வேறு, சமூக இயல் வேறு என்பதாக இரண்டுமே தனித்தனி இயல்கள் கிடையாது.
இவ்விரண்டும் வேறு வேறாகத் தனிப்படுத்தக்கூடிய விஷயமல்ல. அரசியல் என்றாலும் சமூக இயல் என்றாலும் இரண்டும் ஒரு நாட்டின் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்குத்தானேயல்லாமல் வேறு காரியத்திற்கல்ல.
எனவே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான அரசியல் என்றால் அதில் சமூக முன்னேற்றம் இல்லாமலிருக்க முடியாது. அது போலவே சமூக இயல் என்றாலும் அரசியல் முன்னேற்றம் அதில் இல்லாமலிருக்க முடியாது. இரண்டும் தனித்தனி பிரிக்கப்படாத தன்மையுடையது.
நமது நாட்டில் இப்போது இவ்விரண்டும் வேறு வேறாக காணப்படுவதின் காரணம் உண்மையான அரசியல் தொண்டும், உண்மையான சமூக இயல் தொண்டும் இல்லாமல் வெறும் வேஷத்தில் பாமர மக்களை ஏமாற்றி பிழைக்கும் சிலர் தங்கள் சுயநலத்தை வளர்க்கவும் பாடுபடுவதினால், அதாவது நம்மவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள் என்போர்கள் படித்துவிட்டு சம்பாதிக்கப் பாடுபடுவது அரசியலாகவும், உலகமாற்றத்திற்கு அப்பால் பாரம்பரிய முறைகளில் எதிர்கால சமூகத்தை பற்றி சிந்திக்காமல் வயிறு வளர்க்கும் சமூகசேவை-சமூகஇயலாகவும் மதிக்கப்பட்டு வருகிறது.
ALSO READ | எரிபொருள் புகையிரதத்துடன் யானை மோதலால் விபத்து
எனவே இவ்விரண்டு காரியங்களும் நாட்டு முன்னேற்றத்திற்கான அரசியலும் ஆகாது, சமூகசேவையும் ஆகாது .
ஒரு நாடோ அல்லது ஒரு சமூகமோ தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் பரஸ்பர அன்பும் இல்லாமல் ஒருவரை ஒருவர் கொடுமைப்படுத்தி மனிதத் தன்மைக்கு விரோதமாய் வாழும்போது, எப்படியானாலும் மூன்றாம் தரப்பினர் யாராவது ஒருவன் உள்ளே பிரவேசித்து ஆதிக்கம் பெற்றுக் கொள்ளத் தான் முடியும். இந்த நிலையில் நமக்கு ஒவ்வாத ஆட்சிமுறைகள், ஆட்சியாளர்கள், தலைவர்கள் சரிப்படுத்தப்பட்டாலொழிய ஒழிக்கப்படவே முடியாது என்பதை கண்டிப்பாய் கவனத்தில் வைக்க வேண்டும்.
ஏதாவது ஒரு கொடுமையை ஒழிக்க வேண்டுமானால் அக்கொடுமைக்கு உள்ள காரியம் எதுவோ அதை ஒழித்தால்தான் அக்கொடுமை வளராமலிருக்க முடியுமேயல்லாமல் மேலுக்கு மேலாகப் பார்ப்பதால் அது அடியோடு ஒழிக்கப்படவே மாட்டாது.
இந்த மாதிரி அரசியல் என்கிற பேரால் ஒரு கூட்டத்தாரால் நடத்தப்பட்டு வரும் ஒருவித கிளர்ச்சி சிலரின் வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதே தவிர நாட்டுக்கோ நாட்டிலுள்ள மக்களுக்கோ பொதுவாக அதில் ஒருவித நன்மையும் இல்லாததோடு நாட்டுக்கும் மக்களுக்கும் பெரிய தீவினையை உண்டாக்கி வருவதாகவே இருக்கிறது.
முதலாவது நமக்குள் ஒருவித ஒற்றுமை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அதற்காகவே பாடுபட வேண்டும். உண்மையான ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால் அதற்கு இடையூறாய் உள்ளவைகளையெல்லாம் ஒழிய வேண்டும். நமது நாட்டில் ஒற்றுமைக் குறைவு என்பதை ஒரு இனத்தார் இன்னொரு இனத்தார் , கட்சிகளால் என்கிற முறையில் மாத்திரம் இல்லை.
ஒரு மதஸ்தருக்கு மற்றொரு மதஸ்தர் என்கிற முறையில் மாத்திரம் இல்லை. நம்மைப் பொருத்தவரை அதாவது இங்கு கூடியுள்ள இனவாத,சுயநல அரசியலை பொருத்தவரை ஒரு மதஸ்தர் ,இனத்தவர் என்பவர்களுக்குள்ளாகவே அநேக விதமான கொடுமையும் இருந்து வருகிறது.
இனவாதமே நமது நாட்டை இந்த தாழ்ந்த கதிக்கு கொண்டு வந்தது என்பதே நமது அபிப்பிராயம். ஆனால் சமகாலத்தில் இனங்களுக்குள்ளயே பாரிய பிளவுகள் மக்கள் அறிவையும் ஆற்றலையும் அன்பையும் மனித தர்மத்தையும் நமது இனம் நமது கட்சி என்று சொல்லுவதே அழிந்து கொண்டு வருகிறது.
முதலாவதாக நமது நாட்டில் மக்களை பிறவியிலேயே, இனங்களால் ஒன்றுக்கொன்று சேர விடாமல் தடுத்து, கட்சிகளால் பிளவு படுத்தி கொடுமையும் முட்டாள்தனமும் கொண்ட ஆணவம் நமது நாட்டிலும் சமூகத்திலும் தான் இருக்கிறதே தவிர அரசியலுக்காக நல்ல பண்பாடுள்ள நாடுகளில் கண்டிப்பாய் இம்மாதிரி பிறவி தோஷம் கற்பிக்கிறதே கிடையாது.
நமது முன்னோர்களிடம் இம்மாதிரி கொடுமையும் மூடத்தனமும் கொண்ட விஷயங்கள் மருந்துக்கு கூட காணப்படுவதில்லை. நமது நாட்டுக்கு அயல் நாடுகளிலிருந்து ஜனநாயகம் என்ற போர்வையில் கொண்டு வந்து புகுத்தப்பட்ட இந்த கட்சி அரசியல் நம்மை இந்த இழி நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
சமூகசேவை செய்வது தர்மம் என்றும், சமூக சேவை என்பது படித்தவன் பாமரன் என்று ஒரு மனிதனுக்கோ ஒரு இனத்துக்கோ சொந்தமானதல்ல. உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஒருவனுக்கொருவன் உதவி உபகாரம், சேவை முதலியவைகள் செய்ய வேண்டியது கடமையாகும். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய வாழ்நாளில் பரோபகாரத்திற்கு ஒதுக்கி வைத்த நேரங்களிலெல்லாம் சமூக சேவை செய்தவனாகிறான்.
ஒரு மனிதன் ஒரு பொதுக்கிணறு வெட்டினால், வெட்டி வைத்தால், ஒரு பாதை துப்புரவு செய்தால், செய்வித்தால், கல்வி, சுகாதாரம் இன்னும் போதைப்பொருள் தடுப்பு இதுபோன்ற காரியங்கள் செய்தால், சமூகசேவை செய்தவனாகிறான். இது ஒரே வர்ணத்திற்கு அல்லது இனத்திற்கு , வகுப்புக்கு என்பதாக ஏன் பிரித்து வைக்க வேண்டும்? எப்படி பிரித்து வைக்க முடியும்? மற்றவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பாக அவரவர் சவுகரியப்படி செய்ய விடக் கூடாது?
தவிர, நாட்டை யாள்வது தர்மம் என்று சொல்லுவோமானால் ஒரு நாட்டை ஒரு மனிதன்தான் ஆளமுடியும். ஒரு வருணமோ ஒரு ஜாதியோ ஒரு வகுப்போ ,கட்சியோ ஆளமுடியாது. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு இனமோ,வகுப்போ உலகம் பூராவையோ அல்லது ஓர் பாகத்தையோ ஏதாவது ஒரு காலத்தில் ஆண்டு தான் இருக்கின்றது. ஆகவே, எல்லோரும் மனித இனத்தை சேர்ந்தவர்களே!
-SMR