• முகப்பு
  • சிறப்பு கட்டுரை
  • ஏதாவது சாதிக்க முயற்சித்தால், தடைகள் குறுக்கிடும் அந்தத் தடைகள் நம் பயணத்தை நிறுத்தக்கூடாது.

ஏதாவது சாதிக்க முயற்சித்தால், தடைகள் குறுக்கிடும் அந்தத் தடைகள் நம் பயணத்தை நிறுத்தக்கூடாது.

Bala

UPDATED: Jun 16, 2024, 7:14:40 AM

நமக்கு ஏற்படும் நெருக்கடியான சூழ்நிலைகளையும் அதன் காரணமாக ஏற்படும் தோல்விகளையும் மிகப் பெரிய மனோபலத்துடன் சமாளிக்க வேண்டும். இவ்வாறு சமாளித்து வெற்றி பெற்றால், நம்மை வெல்ல யாரும் இல்லை.

நெருக்கடிகளை சமாளிக்கும் போது, அவை எதனால் ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து, அதற்கு தகுந்தவாறு செயல்பட வேண்டும்.

வாழ்க்கையின் பாதையில் பெரிய குழியில் விழுந்தாலும், "இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல், அந்தக் குழியிலிருந்து மேலே வருவது எப்படி என்று எண்ண வேண்டும்.

இடையூறுகள், துன்பங்கள் மனித வாழ்வில் இயல்பானவை. சிலர் அதில் துவண்டு விடுவார்கள், அப்படிப்பட்டவர்கள் தோல்வியைத் தழுவுவார்கள். ஆனால், வெற்றியாளர்கள் எத்தகைய இக்கட்டான சூழலையும் கடந்து செல்லுவார்கள்.

ஏதாவது சாதிக்க முயற்சித்தால், தடைகள் குறுக்கிடும். இவை எல்லோருக்கும் நேர்ந்திருக்கும். அந்தத் தடைகள் நம் பயணத்தை நிறுத்தக்கூடாது.

பாதையில் சுவர் குறுக்கிட்டால், ஓட்டத்தை நிறுத்திவிட்டு திரும்பிப் போகக் கூடாது; அதைத் தாண்டிப் போவது எப்படி என்று கண்டுபிடிக்க வேண்டும். வெற்றி எளிதில் கிடைக்காது. இடையிடையே தடைகள், மனச்சோர்வு உண்டாக்கும் நிகழ்ச்சிகள், சிக்கல்கள் ஏற்படும். 

அதனால் தளர்ச்சி கொள்ளக் கூடாது. நமக்கு ஏற்படும் தடைகள்தான் நம்மை நிதானித்துச் சிந்திக்கச் செய்கின்றன. அடுத்த அடியை எப்படி எவ்வளவு அழுத்தத்தோடு எடுக்க வேண்டும் என்பதற்கான சிந்தனை இந்த தடைகள்தான் தருகின்றன.

வெற்றி பெற்றவர்களைக் கேட்டுப் பாருங்கள். "என்னுடைய முன்னேற்றத்திற்கு எத்தனை தடைகள் இருந்தாலும், மனம் தளரவில்லை. சளைக்காமல் முயன்றேன். அதனால் தான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன்" என்பார்கள்.

பயணத்தில் வழியில் கல்லும் முள்ளும் இருக்கத்தான் செய்யும். நாம் பார்த்து நடக்க வேண்டும். தவறிப்போய் முள் குத்தினாலும், அதை பிடுங்கி எறிந்துவிட்டு பயணத்தை தொடர வேண்டும். அதற்காக அங்கேயே அமர்ந்துவிட மாட்டோம், இல்லையா?

தொல்லைகள், துன்பங்கள், தடைகள் குறுக்கிடும்போது துவண்டு விடாதீர்கள். அதுதான் வாழ்க்கை. உங்கள் திறமைகளுக்கு நீங்களே முற்றுப்புள்ளி வைக்காதீர்கள்.

அவற்றை மீறி, நம்மால் முடியும், எதிர்கொள்ள முடியும் என்ற மனவுறுதியுடன் சிகரத்தை நோக்கி சலிப்பின்றி பயணம் செய்யுங்கள்.

எந்தத் தடைகளுக்கும் அஞ்சாதீர்கள். அவற்றை வரவேற்று கொண்டாடுங்கள். ஏனெனில், தடைகள்தான் உங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும். நெருக்கடியான காலம்தான் மிகச் சிறந்த மனிதனை அடையாளம் காட்டும்.

 

VIDEOS

Recommended