• முகப்பு
  • அரசியல்
  • அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தொடர்புடைய 9 இடங்களில் சோதனை.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தொடர்புடைய 9 இடங்களில் சோதனை.

Bala

UPDATED: Jul 7, 2024, 8:19:02 AM

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு, கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக நிராகரிக்கப்பட்டது. மேலும், அவரது சகோதரர் சேகரின் முன்ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது.

கரூர் நகர காவல் நிலையத்தில், மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் போலி சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டதில், 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்பதால், எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி கடந்த மாதம் 12-ம் தேதி மனு தாக்கல் செய்தார். மூன்று முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டு, கடந்த 25-ம் தேதி மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, 25 நாட்களுக்கு மேலாக அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த மாதம் 14-ம் தேதி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே நாளில் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் என்பவர், கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் தன்னை மிரட்டி ₹100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக புகார் செய்தார். இப்புகார் வாங்கல் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, கடந்த மாதம் 22-ம் தேதி 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் சிகிச்சையின்போது உடன் இருக்க வேண்டுமென்ற காரணத்தால், மீண்டும் முன்ஜாமீன் மற்றும் இடைக்கால முன்ஜாமீன் கோரி, ஜூலை 1-ம் தேதி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஜூலை 2-ம் தேதி விசாரணை வந்த நிலையில், ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இரு தரப்புகளின் வாதங்களை கேட்ட பிறகு, நீதிபதி ஜூலை 4-ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்தார். ஜூலை 5-ம் தேதி, தமிழக அரசு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஷோபனா தரப்பின் வாதங்கள் நடத்தப்பட்டு, ஜூலை 6-ம் தேதி உத்தரவு வழங்கப்படும் என கூறப்பட்டது.

ஜூலை 6-ம் தேதி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகரின் முன்ஜாமீன் மனுக்கள், நீதிபதி சண்முகசுந்தரமால் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தொடர்புடைய இடங்களில் சிபிசிஐடி சோதனை 2வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.

நேற்று 3 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

₹100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில அபகரிப்பு வழக்கில் அவர் 25 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended