தலைவர் ரிஷாட்டின் தீர்மானத்தையே பலப்படுத்துவேன் - முன்னாள் எம்.பி.நவவி தெரிவிப்பு
ஊடக பிரிவு - ACMC
UPDATED: Aug 30, 2024, 10:48:57 AM
கட்சி மாறுவது சமூகத்துக்கு சாபக்கேடாகவே அமையும்;
தலைவர் ரிஷாட்டின் தீர்மானத்தையே பலப்படுத்துவேன்" - முன்னாள் எம்.பி.நவவி தெரிவிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரவளிக்கப்போவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என்றும் தலைமையின் தீர்மானத்தைப் பலப்படுத்துவதற்கு, சஜித் பிரேமதாசவையே ஆதரிக்கப்போவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவவி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி முன்னாள் எம்.பி.நவவி தெரிவித்ததாவது,
"எனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலேயே நான் உள்ளேன். என்னை தேசியப் பட்டியலில் எம்.பியாக்கி, புத்தளம் மாவட்டத்தை கௌரவப்படுத்திய கட்சி இது.
வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றி, புத்தளம் மாவட்ட மக்களை கௌரவப்படுத்திய எமது கட்சியின் தலைவரான ரிஷாட் பதியுதீன் நேர்மையான அரசியல்வாதி. அவருக்குத் துரோகமிழைப்பது சமூகத்துக்கான சாபக்கேடாகவே அமையும்.
அதிகார ஆசைகளுக்காகக் கட்சி தாவியோர், அரசியலில் நிலைத்ததாக வரலாறே இல்லை. சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் இந்த ஜனாதிபதித் தேர்தலில், எமது கட்சியின் தலைவர் சரியான தீர்மானத்தையே எடுத்துள்ளார். இத்தீர்மானத்தையே நாம் பலப்படுத்த வேண்டும்.
தேர்தல் காலங்களில் இவ்வாறான வங்குறோத்து வதந்திகள் பரவுவது வாழமையே! ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.