அநுரவின் திசை காட்டியில் சென்று, நாட்டை படு பாதாளத்திற்குள் தள்ளிவிட வேண்டாம் - உருக்கமாகப் பேசுகிறார் இம்ரான் எம்.பி.
ஐ. ஏ. காதிர் கான்
UPDATED: Aug 31, 2024, 6:41:28 PM
அநுர குமார திஸாநாயக்கவும் அவரது சகாக்களும் நாளை இஸ்ரேலுடன் தேனிலவு கொண்டாட மாட்டார்கள் என்பதில் என்ன உத்தரவாதம்?, எப்படி அவரை நம்புவது?" என, பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார்.
ALSO READ | மீன் பிடிக்க வலை வீசியபோது முதலை சிக்கியது.
கிண்ணியாவில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
முஸ்லிம்களையும் சிறுபான்மை மக்களையும் வஞ்சிக்கும் மோடி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே, அநுரவும் அவரது சகாக்களும் இந்தியா சென்றனர்.
இந்தியாவின் அழைப்பில் தான், அநுர இந்தியாவுக்குச் சென்றார்.
மோடி அரசின் நிகழ்ச்சி நிரலில் தான், அந்த விஜயம் அமைந்திருந்தது. அங்கு யாரையெல்லாம் சந்திக்க வேண்டும் என்று தீர்மானித்தது மோடி அரசாங்கம் தான்.
புல்டோஷரை' க் கொண்டு முஸ்லிம்களின் வீட்டை உடைத்து நொறுக்கும் குஜராத் மாநில முதலமைச்சரையும் அநுர சந்தித்தார். அதானி குழுமத்தையும் சந்தித்தார்.
குஜராத் முதலமைச்சருடன் என்ன ஒப்பந்தம் செய்தார்?, அதானி குழுமத்துடன் என்ன ஒப்பந்தம் செய்தார்?, மோடி அரசாங்கத்துடன் என்ன ஒப்பந்தம் செய்தார்?, என்பது பற்றி இதுவரை காலமும் அவர் வெளிப்படுத்தவில்லை.
வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிராக எப்பொழுதும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் அநுர, இந்திய விஜயத்தின் பின் இந்தியாவின் முதலீடுகளுக்கு எதிராக இதுவரை எந்த ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.
இது தவிர, இவர்கள் அடுத்தடுத்து மேற்கு நாடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டனர். இவர்களின் கொள்கைகள் தான் என்ன?
இன்று இஸ்ரேலை எதிர்ககும் அநுரவும் சகாக்களும், நாளை இஸ்ரேலுடனும் தேனிலவு கொண்டாட மாட்டார்கள் என எப்படி நம்புவது?
எனவே, நாங்கள் இந்த அநுர விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அநுர யார்?, அவர்களின் கொள்கைகள் என்ன?, எப்படி நடந்து கொள்ளப்போகின்றார்கள்?, என்பதையெல்லாம் அவர்களின் திசை காட்டியே எமக்கு காட்டிவிட்டது.
அவர்களின் அந்த மோசமான திசையை நோக்கி நாங்களும் சென்று, இந்நாட்டை படு பாதாளத்திற்குள் தள்ளிவிட வேண்டாம்" என்றார்.