• முகப்பு
  • அரசியல்
  • பொது வேட்பாளரை நிறுத்தியதன் பின்னர் தென்பகுதியில் இருந்து அழைப்புகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன - சுரேன் குருசாமி தெரிவிப்பு 

பொது வேட்பாளரை நிறுத்தியதன் பின்னர் தென்பகுதியில் இருந்து அழைப்புகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன - சுரேன் குருசாமி தெரிவிப்பு 

வவுனியா

UPDATED: Aug 24, 2024, 12:48:22 PM

பொது வேட்பாளரை நிறுத்தியதன் பின்னர் தென்பகுதியில் இருந்து அழைப்புகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்தார். 

வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எமது கட்சியாகிய தமிழீழ விடுதலை இயக்கத்தினுடைய மத்திய குழு கூட்டம் வவுனியாவிலே தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்றது. கூட்டத்திலே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் சம்மந்தமான விடயங்களை எப்படி கொண்டு செல்வது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. 

குறிப்பாக பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டதன் காரணமாக தென்பகுதியில் ஏற்படுகின்ற அழுத்தங்களினால் தென்பகுதி வேட்பாளர்களிடமிருந்து தொடர்ச்சியான பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்களும், கோரிக்கைகளும் வருகின்றன. 

இவ்வாறு தொடர்ச்சியாக வருகின்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பான விடயங்களை எவ்வாறு கையாள்வது பற்றியும் இவ் மத்திய குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதன் ஊடாக பொது வேட்பாளரையும், பேச்சுவார்த்தைக்காக எமக்கு வருகின்ற அழைப்புக்களையும் எவ்வாறு கையாள்வது தொடர்பான அனுமதியினையும் ஆலோசனையை மத்திய குழு கூட்டத்தில் எடுத்துக் கொண்டோம். 

பொது வேட்பாளரை விடுவது என்பதற்கான சாத்தியம் இல்லை. எமக்கு அழைக்கின்ற பேச்சுவார்த்தைகளில் எமது மக்களுக்கான கோரிக்கைகள் அதாவது எதற்காக பொது வேட்பாளரை களமிறங்கினோமோ அல்லது எந்த விடயங்கள் நிறைவேறவில்லை என பொது வேட்பாளரை களம் இறக்கினோமோ, அக்கோரிகளை பிரதான வேட்பாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டியது எமது மக்கள் நலச் சார்ந்து எமது கடமையாகும். ஆகவே இவ்விடயங்களை எவ்வாறு கையாளுவது தொடர்பான முடிவினை இன்று எடுத்து இருந்தோம். 

பொது வேட்பாளர் இல்லாது நடத்தப்படும் பேச்சுவார்த்தை என்பது நாங்கள் வளைந்து சென்று அவர்களிடம் கையேந்துகின்ற நிலைமையை ஏற்படுத்தும். 

ஒரு வேட்பாளரை களம் இறக்கிய பின்னர் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் அதாவது தெற்கிலே இருக்கின்ற வாக்குகள் சமமாக பிரிக்கப்படுகின்ற போது குறித்த பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் அதிகபட்ச வாக்குகளை வழங்கினால் அதன் ஊடாக தங்களுக்கு ஏற்படுகின்ற நிலைமை குறிப்பாக இரண்டாவது வாக்கு எண்ணும் நிலையில் கூட வெற்றியடைய முடியாது என்ற நிலைமையை அவர்கள் உணர்கின்றனர்.

ஆகவே பொது வேட்பாளரை களம் இறக்கியது நமக்கு வெற்றி அடைந்துள்ளது இதற்குப் பின்னராக அவர்களிடம் இருந்து தொடர்ச்சியான அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. என் ஊடாக நாங்கள் ஒரு பலமான நிலைமையில் இருந்து எங்களுடைய கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு ஆகும். 

ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பாக கட்சியிலே பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இருப்பினும் கட்சி எடுத்த ஒரு பொது முடிவிலேதான் நாங்கள் அனைவரும் பயணிக்கின்றோம். இதில் கருத்துக்கள் தனிப்பட்ட ரீதியில் தெரிவிக்கப்பட்டாலும் முடிவு என்ற ரீதியில் அனைவரும் ஒருமித்து பயணிக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார்.



 

VIDEOS

Recommended