மாணவர்கள் போதைப் பொருள் உட்கொண்ட சம்பவம் - வைத்தியர்களின் எச்சரிக்கை.
ஏ. என். எம். முஸ்பிக்
UPDATED: Feb 18, 2024, 12:23:06 PM
தரம் 05 இல் கல்வி கற்கும் மாணவர்கள் குழுவொன்று போதை மாத்திரையை பாவித்து போதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை பாரதூரமான நிலைமை என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா இதனை வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (17) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எந்தவொரு மருந்துப் பொருட்களையும் பிள்ளைகளுக்கு கிடைக்காத வகையில் வீட்டில் சேமித்து வைக்காமல் இருப்பதற்கு பெற்றோர்களும் முதியவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குருநாகல் - மதுராகொட பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 05 இல் கல்வி கற்கும் நான்கு மாணவர்கள் போதையை உருவாக்கும் மாத்திரையை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் தனது தந்தை மறைத்து வைத்திருந்த ஒருவகையான மாத்திரையை பாடசாலைக்கு எடுத்துச் சென்று ஏனைய மூன்று மாணவர்களுடன் சேர்த்து அருந்தியதாகவும், பின்னர் ஒவ்வாமை காரணமாக அவர்கள் குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Also Read : அண்ணாமலை என்கின்ற ஆடு வெட்டப்பட்டு 2024 இந்தியா கூட்டணி ஜெயிக்கும் - லியோனி
பாடசாலைக்கு மாத்திரைகளை எடுத்துச் சென்ற சிறுவனின் தந்தை ஹெரோயின் போதைக்கு அடிமையானவர் எனவும் அவர் மீது போதைப்பொருள் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுராகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.