- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஏற்காடு 46 வது கோடைத் திருவிழாவில் வான் நோக்கும் நிகழ்ச்சி.
ஏற்காடு 46 வது கோடைத் திருவிழாவில் வான் நோக்கும் நிகழ்ச்சி.
அருண்
UPDATED: May 26, 2023, 11:59:01 AM
தமிழ்நாடு அரசு, சேலம் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, சுற்றுலாத்துறை சேலம் ஆகிய துறைகள் ஏற்காடு 46 வது கோடைத் திருவிழாவை நடத்தி வருகிறது.
இந்நிகழ்வில் மலர் கண்காட்சி உட்பட பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வகையில் சேலம் மாவட்ட சுற்றுலாத்துறை தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டி மற்றும் புத்தனம்பட்டி, நேரு நினைவு கல்லூரி இணைந்து ஏற்காட்டில் இரவு வான் நோக்குதல் நிகழ்ச்சி, பகல் நேர வானியல் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.
இதற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து 16 கருத்தாளர்கள் 10ற்கும் மேற்பட்ட பல்வேறு விதமான திறன் வாய்ந்த, விலையுயர்ந்த தொலைநோக்கிகளோடு ஏற்காட்டிற்கு வந்துள்ளனர்.
ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களான அண்ணா பூங்கா, லேடிஸ் வியூ பாயிண்ட் , சில்ட்ரன் வியூ பாயிண்ட், சேர்வராயன் கோவில், ரோஸ் கார்டன், பொட்டானிக்கல் கார்டன், லேக் பார்க் உட்பட பல சுற்றுலா தளங்களில் பகல் நேர வானியல் நிகழ்ச்சியும், இரவு நேர வான்நோக்குதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து சிறப்பாக தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டியின் கருத்தாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டுவருகிறது.
புத்தனம்பட்டி, நேரு நினைவு கல்லூரி இயற்பியல் பேராசிரியர் பொ. ரமேஷ் கலந்து கொண்டு விளக்கம் அளித்தார். பகல் நேர வானியல் நிகழ்ச்சியில் பல்வேறு வானியல் சார்ந்த கருத்துக்கள் மக்களிடையே எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் சூரியனின் கரும்புள்ளிகள் தொலைநோக்கி வழியே சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரவு நேர வான்நோக்குதல் நிகழ்ச்சியில் பிறை நிலா, வெள்ளியின் பிறை மற்றும் சில நட்சத்திர கூட்டங்களை கண்டு இரசிப்பதோடு மட்டுமல்லாமல் அது குறித்த விளக்கங்களை தமிழ்நாடு அஷ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டியின் கருத்தாளர்கள் சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைத்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளும் இங்குள்ள பொதுமக்களும் குழந்தைகளும் என பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு நிகழ்வுகளை கண்டு களித்து உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும் இந்நிகழ்வில் தொலைநோக்கிகள் மூலம் வான்நோக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது ஒரு புது முயற்சியாக இருப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
இவ்வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்காக தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.