• முகப்பு
  • மருத்துவம்
  • சுகாதார துறையின் ஆளணிப் பற்றாக்குறைக்கு தீர்வு வேண்டி சுகாதார அமைச்சரிடம் ஆளுநர் சார்ள்ஸ் கோரிக்கை

சுகாதார துறையின் ஆளணிப் பற்றாக்குறைக்கு தீர்வு வேண்டி சுகாதார அமைச்சரிடம் ஆளுநர் சார்ள்ஸ் கோரிக்கை

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Jul 17, 2024, 1:57:50 PM

வடக்கு மாகாண சுகாதார துறையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை தீர்க்கவும், சேவைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம், ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (17/07/2024) வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில், சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தலைமையில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

 இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் P.G. மஹிபால, வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல். இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

விசேட கலந்துரையாடலுக்கு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மற்றும் பல விசேட வைத்தியர்கள் உட்பட பலர் வருகை தந்தனர்.

 

கூட்டத்தில் உரையாற்றிய கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், "சுகாதார மற்றும் கல்வித் துறைகள் நாட்டில் மிகப்பெரும் சிக்கல்களை சந்திக்கின்றன. எங்களின் மாகாணத்தில் பல சவால்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. வளங்களின் பற்றாக்குறையையும், சுகாதார

சேவையில் மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் நான் வலியுறுத்தி வருகின்றேன்," என்றார்.

"நோய் தடுப்புகளை மேற்கொள்வதிலும் நோயாளர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறும் எனது அதிகாரிகளை நான் அறிவுறுத்தி வருகின்றேன். வரையறுக்கப்பட்ட வளங்களை கொண்டு சிறந்த சேவைகளை வழங்குவதற்கு எங்கள் அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர். மாகாண சுகாதார துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை தொடர்ச்சியாக பரிசீலித்து வருகின்றோம்," என்று அவர் தெரிவித்தார்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் நான்கு வைத்தியசாலைகளில் திறந்துவைக்கப்பட்ட விசேட பிரிவுகளுக்கான வளங்களை பகிர்ந்து பயன்படுத்துவது பற்றிய ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படுகின்றது. முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளின் குறைவுகளை தீர்க்க முன்மொழிவுகளை இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சமர்பித்துள்ளோம்," என்றார்.

கூட்டத்தின் முடிவில், "வட மாகாண சுகாதார துறையின் ஆளணிப் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வுகளை வழங்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். அமைச்சர் விரைவில் இதற்கு தீர்வுகளை ஏற்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்," என்று ஆளுநர் சார்ள்ஸ் தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended