இடப்படுகின்ற கல்விக்கான வித்து

கே. கோமகன்

UPDATED: Jun 22, 2024, 5:53:32 AM

இன்றைய நாள் நமது கிராமத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். எமது எதிர்கால சந்ததியின் கல்விக்காய் கிராமத்தில் உள்ள எல்லோரையும் ஒன்றாக்கி ஒரு செயற்பாட்டை முன்னெடுத்திருக்கின்றோம். திரண்டால் மிடுக்கு என வெண்கரம் அமைப்பினால் நெறிப்படுத்தப்படுகின்ற இந்த செயற்றிட்டத்தின் பயனாளர்கள் எமது கிராமத்தின் எதிர்கால சந்ததிகளே என்பதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.

original/inshot_20240622_111507735
2020 ஆம் ஆண்டில் வெண்கரம் அமைப்பால் எமது முதலிகோவிலடி கிராமத்தில் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.அம்பாள் சன சமூக நிலையத்தினருடன் இணைந்து தரம் 10 ,11 மாணவர்களுக்கு கணிதம், தமிழ், வரலாறு ஆகிய பாடங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற்றன. இரவு நேரங்களில் மாணவர்களுக்கான சுயகற்றல் செயற்பாடுகளோடு தரம் 5 மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளும் நடைபெற்றன.

எமது கிராமத்து மாணவர்களது ஒழுக்கத்திலும் பழக்கவழக்கங்களிலும் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

 இதே காலப்பகுதியில் சன சமூக நிலையத்திற்கான காணி1பரப்பும் 6குழியும் கொண்ட நிலம் நன்கொடையாளர் நிதிப்பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்டது.

கொள்வனவு செய்யப்பட்ட காணியின் முன்பக்கம் கிராமத்து மக்களின் பங்களிப்பை பெற்று மதில் கட்டும் செயற்பாட்டையும் வெண்கரம் அமைப்பினரே நெறிப்படுத்தி வழிகாட்டினர். 

எமது கிராமத்தில் முன்பள்ளிக்கென நிரந்தர கட்டிடம் இல்லை. இருக்கும் கட்டிடத்தில் கோடை காலம் அதிக வெப்பமும் மழைக்காலம் கூரைகளின் ஊடாக மழை பெய்யும். எனவே நமது குழந்தைகளுக்கு நிரந்தரமாய் முன்பள்ளி தேவை என்பதை உணர்ந்தோம்.

முன்பள்ளி கட்டிடம் அமைக்கும் திட்டத்தை வெண்கரம் அமைப்பினர் எமக்கு உணர்த்தினர். புலம்பெயர் தேசத்தவரின் நன்கொடையை பெற்று முன்பள்ளி கட்டிடம் அமைக்க சனசமூக நிலையத்தவர்களுடன் ஆலோசித்தனர்.

 முன்பள்ளி கட்டிட வரைபடம், திட்ட முன்மொழிவுகள், செலவின விபரம் 40 லட்சம் அடங்கிய அறிக்கை நன்கொடையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் நன்கொடையாளரால் முன்பள்ளிக்கான கட்டிட நிதியாக 19 லட்சத்து 94 ஆயிரத்தி 692 ரூபாய் 31 சதம் மட்டுமே வங்கியில் வைப்பிலிடப்பட்டது.மீதி நிதிக்காக வெண்கரம் அமைப்பினர். எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

குறித்த நிதி கிடைக்க பெற்று மூன்று வருடங்கள் கழிந்திருக்கிறது. நீண்ட கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு பல காரணங்கள்.

 கடந்த சனசமூக நிலையத்தவர்களது ஒத்துழைப்பு வெண்கரம் அமைப்பினருக்கு இல்லாதிருந்தமை

வெண்கரம் அமைப்பால் பல தடவைகள் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாட அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் நிர்வாகத்தினர் அதனை பொருட்படுத்தி ஒத்துழைக்கவில்லை. 

 இடைப்பட்ட காலத்தில் பொருளாதார நெருக்கடியால் கிடைத்த அரைப் பங்கு நிதியில் கட்டிடத்தை அமைக்க முடியவில்லை. கட்டிட செலவினம் மூன்று மடங்கால் அதிகரித்திருந்தது.உதாரணமாக கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிட்ட போது ஆயிரம் ரூபாவாக இருந்த சீமெந்தின் விலை 3400 ஆக உயர்ந்திருந்தது.

 தமக்கு நிதி கிடைக்க பெற்று நீண்ட காலம் செல்வதாலும் எமது கிராமத்தின் ஒத்துழைப்பு இன்மையாலும் நிதியை திருப்பி ஒப்படைக்கப் போவதாக வெண்கரம் அமைப்பினர் எமக்கு தெரிவித்தனர். 

எமது கிராமத்தின் அம்பாள் சனசமூக நிலையம் நீண்ட காலமாக நிர்வாகத் தெரிவின்றி செயலிழந்த நிலையில் காணப்பட்டது. புதிய நிர்வாகத் தெரிவு இடம் பெறும் வரை கால அவகாசத்தை நாம் அவர்களிடம் கோரினோம்.  

இந்த நிதி எங்கள் கிராமத்துக்காக சேகரிக்கப்பட்ட நிதி. இதனை யாரிடமும் திருப்பி ஒப்படைக்க வேண்டாம். எங்கள் சந்ததிக்கு இது பயன்பட வேண்டும். என கிராமத்திலுள்ள இளைஞர்கள் கூடி முடிவெடுத்தோம்.

 கிராமத்து இளைஞர்களது உடல் உழைப்புடன் இந்த நிதியை பயன்படுத்தி முன்பள்ளிக்கான கட்டிடத்தை மாடிக் கட்டிடமாக கட்ட முடிவு செய்தோம். நமக்கான வழிகளை நாமே தேட வேண்டும்.

 பல சவால்களுக்கு மத்தியில் சன சமூகநிலைய நிர்வாக தெரிவை நிறைவு செய்தோம்.

 வெண்கரம் அமைப்பினர் முன்பள்ளிக்காக கிடைத்த நிதியை இத்தனை காலம் பாதுகாத்து வட்டியோடு 2,116,820:56 ரூபாவாக எமது நிர்வாகத்திடம் கையளித்துள்ளனர்.

 எமது கிராமத்தின் எதிர்கால சந்ததிக்காக கல்வியால் சமூக மாற்றத்தை ஏற்படுத்திவிட வேண்டும் எனும் குறிக்கோளுக்காக இந்த நிதி விடயத்தில் வெண்கரம் அமைப்பினர் எதிர்நோக்கிய நெருக்கடிகளையும் வலிகளையும் பல சம்பவங்கள் அவர்களை காயப்படுத்தியுள்ளதையும் நாம் அறிவோம்.  பொதுச்சேவைக்காய் அர்ப்பணிப்போடு செயற்படும் வெண்கரம் அமைப்பினர் எமக்காக பல சவால்களுக்கு முகம் கொடுத்தார்கள். அவர்களது தன்னலமற்ற சேவையை நன்றியோடு போற்றுகின்றோம்

எங்கள் கிராமத்தில் வெண்கரம் அமைப்பால் இன்றைய தினம் இடப்படுகின்ற இந்த கல்விக்கான வித்து வளர்ந்து விருட்சமாகும் என்பதை அவர்களுக்கு நன்றியோடு தெரிவித்துக் கொள்கின்றோம் என்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்படுகிறது.

 

VIDEOS

Recommended