புரவலர் ஹாசிம் ஒமர் இலக்கு நோக்கி பயணிக்கும் மாணவ சமூகத்தினருக்கு உதவி - வசந்தம் செய்தி முகாமையாளர் ஹனீபா
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Oct 6, 2024, 6:25:57 AM
கலைஞர்களுக்கும்.எழுத்தளார்களுக்கும் கரம் கொடுத்து வந்த புரவலர் ஹாசிம் ஒமர் இலக்கு நோக்கி பயணிக்கும் மாணவ சமூகத்தினருக்கு உதவிகளை தொடராக வழங்கிவருவதானது பாராட்டப் பட வேண்டியதொன்று என்று வசந்தம் தொலைக்காட்சியின் செய்தி முகாமையாளரும்,சிரேஷ்ட ஊடகவியலாளருமான சித்தீக் ஹனீபா தெரிவித்தார்.
கொழும்பு கொள்ளுப் பிட்டியில் அமைந்துள்ள புரவலர் ஹாசிம் ஒமரின் இல்லத்தில் ஹாசிம் ஒமர் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்திருந்த 5 வது கட்ட மடிக்கணணி வழங்கும நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
புரவலர் ஹாசிம் ஒமர் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கட்டாரினை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஸ்கை ஊடக அமைப்பின் முகாமையாளர் எம்.பாசித் பிரதம அதிதயாக கலந்து கொண்டதுடன்,தினகரன் வாரமலர் பத்திரிகையின் ஆசிரியர் செந்தில் வேல்,சமூக ஜோதி எம்.எம்.றபீக் தமிழன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஜவுபர் உள்ளிட்ட பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.
பேருவளையினை சேர்ந்த பீ.எச்.ஆயிஸா,வட்டவலயினைச் சேர்ந்த கே.கீர்த்தனா,திஹாரியினைச் சேர்ந்த எம்.ஆர்.எஸ்.எம்.அஹமட்,நிந்தவூரைச் சேர்ந்த எப்.எப்.மின்ஹா நாங்கல்ல துல்ஹிரியாவைச் சேர்ந்த எம்.ஏ.எப்.றகுமா ஆகியோருக்கு இந்த மடிக்கணணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் சித்தீக் ஹனீபா இங்கு உரையாற்றுகையில் ;-
ஹாசிம் ஒமர் அவர்களை நீண்டகாலமாக அறிவேன்.எந்தவொரு பணியினை செய்தாலும் அதனை நேர்த்தியாக செய்ய வேண்டும் என்பதில் அதீத அக்கறை கொண்டவர்.மற்றையவர்களும் அதனை சரியாக செய்ய வேண்டும் என்பதில் துணையாக நிற்கும் ஒருவர் என்பதை கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இன்றைய தினம் இந்த மாணவர்களின் எதிர்காலத்திற்கும்,அவர்களது தேடல்,மற்றும் கற்றல் நடவடிக்கைகளுக்காக பெறுமதியான கணணிகளை அன்பளிப்பு செய்வதானது உயர்ந்த சிறந்த முன்மாதிரியான முயற்சியாகும் என்றும் இதன் போது அவர் குறிப்பிட்டார்.
இறுதியில் கணணியினை பெற்றுக் கொண்டவர் சார்பில் மாணவி தமது நன்றியினை அனைவர் சார்பிலும் புரவலர் ஹாசிம் ஒமருக்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தினகரன் வாரமலர் பிரதம ஆசிரியர் செந்தில் வேல்,சமூக Npஜாதி றபீக் ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.