திருச்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கால தாமதம், அரசு பணம் விரயம் - செல்வப் பெருந்தகை.

JK

UPDATED: Oct 24, 2024, 6:32:26 PM

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். குழுவின் உறுப்பினர்களான அக்னி கிருஷ்ணமூர்த்தி, அப்துல் சமது, பழனியாண்டி, சந்திரன் உள்ளிட்டோர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 

களஆய்வுக்கு பின்னர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுகள் குறித்து துறை அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்வப்பெருந்தகை :

தமிழக சட்டசபை பொது கணக்குக்குழு ஏற்கனவே 38மாவட்டங்களில் ஆய்வை முடித்து, தற்போது 2ம் சுற்று ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இதில் 75சதவீத ஆய்வு முடிந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டத்தில் இன்று சட்டசபை பொதுக்கணக்குக்குழு கள ஆய்வு மேற்கொண்டது. 

இதில், 2021க்கு முன்பு நடந்த பணிகள் குறித்து மாநில கணக்காயர்கள் தணிக்கை அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதில், மக்கள் உயிர்காக்கும் தீயணைப்பு துறையில் 10ஆண்டுகளுக்கு மேல் வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை உள்ள நிலையில் இங்கு 15, 20 ஆண்டுகள் பயன்படுத்தி உள்ளது குறித்தும்,

ரூ.10 கோடி மதிப்பில் பின்லாந்தில் இருந்து ‘வால்வோ’ என்ற மீட்பு வாகனம் காலதாமதமாக வாங்கியதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறித்தும், 11 தீயணைப்பு நிலையங்களில் 5நிலையங்கள் சொந்த இடத்திலும், 6நிலையங்கள் வாடகை கட்டடத்திலும் செயல்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்து விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.

திருச்சி புத்துார் பகுதியில் உள்ள விழியிழந்தோர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 30 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய நிலையில் 6ஆசிரியர்கள் தான் இருக்கின்றனர்.

அந்த காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும், மாணவிகளை மாதம் ஒரு முறை வெளியில் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும் என குழு பரிந்துரை செய்துள்ளது. 

இதுபோன்று பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. 

அரசுப்பள்ளிகள், தரம் உயர்த்துதலில் அரசு சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தவில்லை என்ற அதிருப்தியும் உள்ளது. 

காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, 60சதவீதம் மதிப்பெண் மூலம், 40சதவீதம் மற்ற செயல்பாடுகள் அடிப்படையிலும் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறையும் பின்பற்றப்படவில்லை என்ற அதிருப்தியும் உள்ளது. இவை குறித்து சென்னையில் துறை செயலாளர்களை அழைத்து குறித்து பேசி முடிவு செய்யப்படும்.

மாநகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கால தாமதம், அரசு பணம் விரயம் என்றெல்லாம் தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இது எல்லாம் 2021க்கு முன்பு நடந்த ஆய்வுகளின் அடிப்படையில் குறிப்பிட்டுள்ளனர். 2021க்கு பிறகான பணிகள் குறித்த தணிக்கை அறிக்கை இன்னும் வரவில்லை. 

முக்கொம்பு மேலணையில் வெளியேறும் தண்ணீரை சேமித்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கான தடுப்பணைகள் கட்டுதல் குறித்த அம்சங்கள் குறித்து சென்னையில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளோம். 

திருச்சியில் மற்ற வளர்ச்சிப்பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது என தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மாநகர மேயர் அன்பழகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended