- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கும்மிடிப்பூண்டி அருகே பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய ஏற்பட்ட பிரச்சனையால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு சீல் வைப்பு.
கும்மிடிப்பூண்டி அருகே பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய ஏற்பட்ட பிரச்சனையால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு சீல் வைப்பு.
L.குமார்
UPDATED: Aug 9, 2024, 5:49:18 PM
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி
அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் அருள்மிகு எட்டியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 1998ல் கட்டப்பட்ட இந்த ஆலயம் பிறகு அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
இந்த ஆலயத்திற்கு கடந்த 2002 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற போது பட்டியலின மக்கள் கோவிலில் வழிபாடு செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அப்போது ஆலயத்திற்கு சீல் வைக்கப்பட்டிருந்தது.
பிறகு இருதரப்பினர் இடையே ஏற்பட்ட உடன்பாடு காரணமாக 2012 ஆம் ஆண்டு சீல் அகற்றப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் பட்டியலின மக்கள் அங்கு சென்று வழிபட எதிர்ப்பு நீடித்ததால் அந்த ஆலயத்திற்கு சென்று வழிபடாமலே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அண்மையில் எட்டியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவினை ஒரு தரப்பினர் செய்து வந்துள்ளனர்.
Thiruvallur News Today Tamil
அப்போது பட்டியலின மக்கள் தங்களது பங்கிற்காக ஆலய புனரமைப்பு பணிகளுக்கு பணத்தைக் கொடுத்த போது அதை மாற்று சமூகத்தினர் வாங்கவில்லை என கூறப்படுகிறது.
பணம் வேண்டாம் எனவும் நீங்கள் வந்து வழிபாடு செய்து கொள்ளலாம் என அப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பட்டியலின மக்கள் கும்பாபிஷேக விழாவில் தங்களை அனுமதிக்க வேண்டும் எனவும் கோவிலில் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்த் துறையில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டியலின மக்கள் தரப்பு பிரதிநிதிகளும், மாற்று சமூக மக்கள் பிரதிநிதிகளும் வட்டாட்சியர் சரவணக்குமார், காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தி தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
Thiruvallur News Today Live
அப்போது பட்டியலின மக்களை கோவிலில் வழிபாடு செய்வதாக மாற்று சமூகத்தினர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஏராளமான போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை எட்டியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேகம் முடிந்த பிறகு பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்ற போது மாற்று சமூகத்தினர் தங்களுக்கு சொந்தமான பாதையில் வரக்கூடாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவிலுக்கு வரும் பாதையை தாங்கள் சொந்தமாக வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் இந்த வழியில் பட்டியலிட மக்கள் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வேறு வழியில் வர முயன்ற போதும் அதுவும் பட்டா வழி என எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து கால்வாயில் முட்புதர் மண்டி கிடந்த வழியாக செல்ல முயன்ற போதும் சிலர் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் சூழல் உருவானதால் காவல்துறையினர் பட்டியலின மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
Latest Thiruvallur News
இதையடுத்து சம்பவ இடத்திற்கு பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது தங்களது பட்டா நிலத்தில் பட்டியலின மக்கள் வரக்கூடாது என மாற்று சமூகத்தினர் திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிகாரிகள் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் கோவிலை மூடுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சார் ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் வருவாய் துறையினர் ஆலய கதவுகளை பூட்டி சீல் வைத்தனர்.
தொடர்ந்து ஆலயத்திற்கு முன் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தங்களை ஆலயத்தில் சென்று வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் பட்டியலின மக்கள் அவ்வழியே வந்த அரசு பேருந்து மறித்தும், சாலையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News
தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். இரு தரப்பிலும் மேலும் பிரச்சினை ஏற்படாத வண்ணம் இரண்டு ஊர்களிலும் காவல் துறையினர் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலங்கள் மாறிய சூழ்நிலையிலும் தங்களை இன்னமும் ஆலயத்திற்குள் சென்று வழிபாடு செய்ய மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களை கோவிலுக்குள் அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டியல் சமூக மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.