• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தொற்று நோய்களுக்கு உள்ளாக்கிவரும் மன்னார்குடி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் அமைதி பேரணி.

தொற்று நோய்களுக்கு உள்ளாக்கிவரும் மன்னார்குடி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் அமைதி பேரணி.

தருண்சுரேஷ்

UPDATED: Oct 17, 2024, 2:22:35 PM

திருவாரூர் மாவட்டம்

மன்னார்குடியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் ஆகியவற்றை 29வது வார்டுக்கு உட்பட்ட மதுக்கூர் சாலையில் நகராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது

குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் மனநலம் குன்றியோருக்கான பள்ளியும், ஆயிரக்கணக்கான பெண்கள் பயிலும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் தங்கும் விடுதி, ஆதிதிராவிட கல்லூரி மாணவர்களுக்கான விடுதி, ஆரம்ப சுகாதார மகப்பேறு நிலையம், 3 தனியார் பள்ளிகள், பொதுமக்கள் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் என தினசரி அவ்வழியாக பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இத்தகைய குப்பை மேட்டில் தீ பரவிய நிலையில் அதில் இருந்து ஒரு மாதத்திற்கு மேலாக புகை வந்த வண்ணம் இருந்ததால் காற்று மாசு ஏற்பட்டு அப்பகுதி வழியாக செல்பவர்கள் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பினி பெண்கள் சுவாசப்பிரச்சனைகளுக்கு உள்ளாகி கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகினர்.

மேலும் 29வது வார்டில் குப்பைகளில் தேங்கும் மழைநீரில் புழுக்கள் மற்றும் கொசுக்களால் டெங்கு, மலேரியா, மூளைக்காய்ச்சல் போன்ற நோய் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் குப்பைகளில் இருந்து பரவும் ஈக்களால் வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள்காமாலை போன்ற தொற்றுநோய்களுக்கும் அப்பகுதியினர் ஆளாகி அவதியுற்று வருகின்றனர்.

மேலும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் அடிக்கடி எரியூட்டி வருவதால் அதில் இருந்து வெளியாகும் டை-ஆக்சின் எனும் நச்சு புற்றுநோயை உண்டாக்குவதோடு, புகையால் ஆஸ்துமா போன்ற நோய் உடையவர்கள் மூச்சுதிணறி உயிரழப்புக்கும் ஆளாகும் நிலை எழுந்துள்ளது.

இதனை கண்டித்து மன்னார்குடி நல்ல தண்ணீர் நீர்தேக்க பாதுகாப்புக்குழு மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் 200க்கும் மேற்பட்டோர் பேரணியாக மன்னார்குடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

மேலும் இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் நாளை முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடபோவதாகவும் போராட்டக் ழுவினர் எச்சரித்தனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended