• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தக்காளி சாதத்தில் தக்காளியை தேடிய மாவட்ட ஆட்சியர் - அரைத்துப் போட்டதாக பதில் கூறிய சத்துணவு பணியாளர்.

தக்காளி சாதத்தில் தக்காளியை தேடிய மாவட்ட ஆட்சியர் - அரைத்துப் போட்டதாக பதில் கூறிய சத்துணவு பணியாளர்.

லட்சுமி காந்த்

UPDATED: Nov 13, 2024, 12:19:58 PM

காஞ்சிபுரம் மாவட்டம் 

ஶ்ரீபெரும்புதூர் அருகே சேந்தமங்கலம் ஊராட்சியில் உள்ள நியாயவிலை கடை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளிட்டவை மாவட்ட ஆட்சியர் இன்று திடீர் ஆய்வு செய்தார். 

ஆய்வின்போது நியாயவிலை கடையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மக்கள் சரியாக வந்து வாங்குகிறார்களா என்று விற்பனையாளரிடம் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் புத்தகத்தில் உள்ளவற்றை படித்து காட்டும்படி கேட்டார். மாணவர்களும் எழுத்து கூட்டி படித்து காட்டினர். மாணவர்களை ஆங்கிலத்தில் படிக்க வைக்க அதிகம் கவனம் செலுத்துங்கள் என ஆசிரியைக்கு அறிவுறுத்தினார். 

தக்காளி சாதம்

தொடர்து சமையல் அறையை ஆய்வு செய்தபோது மாணவர்களுக்காக சமைத்து வைத்து இருந்த உணவை பார்த்து இது என்ன உணவு என்று கேட்டார். இது தக்காளி சாதம் என்று சத்துணவு பணியாளர் கூறினார். 

இது தக்காளி சாதம் சொல்றிங்க ஆனா இதுல தக்காளியே இல்லையே என்று மாவட்ட ஆட்சியர் கேட்க தக்காளியை அரைத்து போட்டதாக சத்துணவு பணியாளர் பதில் அளித்தார்.

அங்கன்வாடி

அப்பொழுது மாவட்ட ஆட்சியர் நீங்கள் தக்காளியே போடவில்லை என்று கூறினார். அப்பொழுது சத்துணவு பணியாளர் என்ன சொல்வது என்று அறியாது விழி பிதுங்கி நின்றார்.

அதனையடுத்து அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுடன் அமர்ந்து அங்கன்வாடி பணியாளர் சொல்லும் கதைகளை பொறுமையாக கேட்டுகொண்டார்.

 

VIDEOS

Recommended