காஞ்சிபுரம் மலர் சந்தையில் மல்லிகைப் பூவின் விலை கிலோ ரூபாய் 200க்கு விற்பனை.
லட்சுமி காந்த்
UPDATED: May 5, 2024, 6:08:32 PM
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் உள்ள மலர் சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான முருங்கை , பட்டு முடையார் குப்பம், கடம்பநல்லூர் , மாரிமங்கலம் ,சிவபுரம், தர்காஸ், கேசவபுரம், புரிசை போன்ற 20 கிராமங்களுக்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து மல்லிகை பூ விவசாயிகள் காஞ்சிபுரம் மலர் சந்தைக்கு மல்லிகை பூக்களை விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
ஒரு நாளைக்கு சுமார் 3000 முதல் 4000 கிலோ மல்லிகை பூ காஞ்சிபுரம் மலர் சந்தைக்கு வர வைக்கப்படுகிறது. முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் இந்த பூக்கள் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதி வாழ் மக்களே வாங்கி செல்கின்றனர் .
இது தவிர தாம்பரம், உத்திரமேரூர், வந்தவாசி பகுதியில் உள்ள பூ வியாபாரிகளும் காஞ்சிபுரம் மலர் சந்தைக்கு வந்து மல்லிகை பூக்களை வாங்கி செல்கின்றனர்.
தற்போது மல்லிகை பூவிற்கு சீசன் என்பதால் அதிகமான மல்லிகை பூ விளைச்சல் ஏற்பட்டு காஞ்சிபுரம் மலர் சந்தைக்கு மல்லிகை பூக்கள் வந்து குவிக்கின்றன .தற்போது பண்டிகை காலம் ஏதும் இல்லாத காரணத்தினால் ஒரு கிலோ மல்லிகை 180 ரூபாய் க்கு விற்பனையாகிறது.
காஞ்சிபுரம் மக்கள் பயன்பாட்டிற்கும் வெளியே மற்ற நகர பூ வியாபரிக்கும் விற்பனைக்கு போக மீதம் உள்ள சுமார் 1000 முதல் 2000 கிலோ மல்லிகை பூ திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் பகுதியில் உள்ள நறுமண பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மல்லிகை பூ விளைச்சல் அதிகமாக இருந்தாலும் ரூபாய் 200க்கும் குறையாமல் விற்பனையாகிறது. மல்லிகை பூ விளைச்சல் குறைந்து காணப்படும் போது 2000 முதல் 3000 வரை விற்பனை ஆகிறது.
ஆக மல்லி பூ விவசாயத்தால் விவசாயிகளும் அதைச் சார்ந்துள்ள வியாபாரிகளும் கணிசமான லாபம் கண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.