மன்னாரில் வெள்ளப் பாதிப்பு மக்களுடன் களத்தில் நிற்கும் ரிஷாட் பதியுதீன்
ஊடக பிரிவு
UPDATED: Nov 26, 2024, 10:41:14 AM
வட மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளையும் பார்வையிடுவதற்கு, நேற்றைய தினம் மன்னாருக்கு விஜயம் செய்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தொடர்ந்து இன்றைய தினமும் (26) களப்பணிகளை மேற்கொண்டிருந்தார்.
இன்று காலை, பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள குடியிருப்புக்கள் மற்றும் தற்காலிக நலன்புரி நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட அவர், அவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் மற்றும் உலர் உணவுகளை வழங்குவது தொடர்பிலும், அவசர உதவிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, அவற்றை துரிதமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.
அத்துடன், நீரில் மூழ்கியுள்ள பகுதிகளையும் பார்வையிட்ட அவர், வெள்ளநீர் வழிந்தோடுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள வழிவகைகள் குறித்தும் ஆராய்ந்தார்.
இதன்போது, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வைத்தியர்.மிக்ரா, மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாஹிர், உபதவிசாளர் தெளபீக் மற்றும் இளைஞர் சேவை மன்றப் பணிப்பாளர் முனவ்வர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் உடனிருந்தனர்.