கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் மி.மீ. 150 க்கு மேல் பலத்த மழை
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Nov 24, 2024, 2:08:07 PM
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியை சூழவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (25) தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியை சுற்றி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வளர்ச்சியடைந்து தீவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டல தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் வானம் மேக மூட்டத்துடன் கனமாக இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு வடமத்திய கிழக்கு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும்.
வடக்கு வடமத்திய மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது கி.மீ. (30-40) வரை பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.