• முகப்பு
  • இலங்கை
  • பிரதமர் அரசியல் இலாபம் கருதியும், பாராளுமன்றத்தின் வரப்பிரசாதங்களுக்கு அடிமையாகியும் வெளியிடும் கருத்து பாரதூரமானது

பிரதமர் அரசியல் இலாபம் கருதியும், பாராளுமன்றத்தின் வரப்பிரசாதங்களுக்கு அடிமையாகியும் வெளியிடும் கருத்து பாரதூரமானது

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: Jul 27, 2024, 12:32:40 AM

மனித உரிமைகளை மீறி செயற்பட்ட எந்தவொரு பொலிஸாரையும் அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு உயர் நீதிமன்றத்திற்கு சட்டத்தில் இடமுண்டு.

அந்த வகையில், மனித உரிமைகளை மீறி நடந்து கொண்ட பொலிஸ் மா அதிபரையும் அவரது சேவையிலிருந்து இடை நிறுத்தம் செய்ய உயர் நீதிமன்றத்திற்கு அருகதை உள்ளது என, பயங்கர ஊழல் மோசடிகள் மற்றும் இலஞ்ச ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் லேசில் த சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை, அவரது சேவையிலிருந்து இடை நிறுத்தம் செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியும்" என்றும், இது சரியான தீர்ப்பாகும்" என்றும் அவர் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.    

 கொழும்பில் நேற்று (26) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெளிவுபடுத்திப் பேசியுள்ளார். 

 அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், 

பிரதமர் தினேஷ் குணவர்தன சபையில், பொலிஸ் மா அதிபரை உயர் நீதிமன்றம் இவ்வாறு இடை நிறுத்தம் செய்திருப்பது தவறு என சுட்டிக்காட்டியுள்ளார்.

 பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விசேட அறிவிப்பொன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஆனால், பிரதமர் அரசியல் இலாபம் கருதியும், பாராளுமன்றத்தின் வரப்பிரசாதங்களுக்கு அடிமையாகியுமே இவ்வாறான அறிவிப்பொன்றை பாராளுமன்றத்தில் மேற்கொண்டுள்ளார். இது முற்றிலும் அவரது தவறான கருத்தாகும்.

 நாட்டின் சட்டத்தையும், அரசியலமைப்புச் சபை மற்றும் அரசியல் ஒழுக்கக் கோவையையும் நினைத்தவாறெல்லாம் ஒழுங்கற்ற விதத்தில் நடத்துவதற்கும் பேசுவதற்கும் அரசியல்வாதிகளுக்கு முடியாது. உயர் நீதிமன்ற விவகாரங்களிலும் அவர்களுக்கு எவ்விதத்திலும் கை வைக்க முடியாது.

அந்தவகையில், மனித உரிமைகளை மீறி நடந்த பொலிஸ் காரர் ஒருவரை நீக்குவதற்கான முழுமையான உரிமை உயர் நீதிமன்றத்திற்கு உண்டு. உயர் நீதிமன்றத்திற்கு இதற்கான அதிகாரமுமுள்ளது. 

 எனவே, பொலிஸ் மா அதிபர் மீதான உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை செல்லுபடியானதே.

 இது தொடர்பான எந்தவொரு விவாதத்திற்கும் தான் எச்சந்தர்ப்பத்திலும் முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்" என்றார்.



 

VIDEOS

Recommended