இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களின் நலனை முற்படுத்தியே செயல்படுகிறது
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Aug 15, 2024, 5:06:16 AM
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் விடா முயற்சியினாலேயே மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பினை பெற்றுக் கொள்ள முடிந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும்,தோட்ட உட்கட்டமைப்பு,நீர்வளங்கள்,வடிகாலமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கணடவாறு கூறினார்.
மேலும் இதன் போது அவர் கருத்துரைக்கையில் :-
மலையகத் தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நன்கறிந்த தொழிலாளர் காங்கிரஸ் எல்லா சந்தரப்பங்களிலும் எமது மக்களுக்காக போரடி வந்துள்ளது.
இந்த அடிப்படையில் 2020 இலும்,அது போன்று 2023 தொடக்கம் இந்த அதிகரிப்பு தொடர்பில் பல முயற்சிகளை செய்து வந்துள்ளது.மாறாக சில அரசியல் கட்சிகள் மலையக மக்களின் வாழ்க்கையினை அவ்வாறே வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்படுகின்றனர்.
இவர்களிடம் அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்,நீங்கள் உஙகளது பெயர்களை போட்டுக் கொள்ளுங்கள் ஆனால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை இல்லாமல் செய்யாதீர்கள்,அரசியலுக்காக மலையக மக்களின் வாழ்க்கையினை அழித்துவிடாதீர்கள்.
குறிப்பாக மலையகத்தின் அபிவிருத்தி தொடர்பில் இருக்கின்ற அரசாங்கங்களுடன் நெருக்கமாக செயற்படுவதன் மூலம் மட்டுமே எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
நீண்டகாலமாக இருந்து வந்த சம்பளப் பிரச்சினைக்கான அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது.நிலையான 1350 ரூபா சம்பளம் நிச்சயிக்கப்பட்டுள்ளது இது பெரும் மக்களின் வெற்றியாகும்.
ஆனால்,சிலர் மேடைகளில் ஏறி பொய்களை சொல்கின்றனர்.அவர்களிடம் கேட்க விரும்புவதெல்லாம் அன்று நீங்கள் சம்பள அதிகரிப்புக்கு ஆதரவாக பேசினீர்கள்,இன்று வேறு விதமாக பேசுகின்றீர்கள்,அன்று தேர்தல் அறிவிக்கப்படவில்லை இன்று தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது என்பதனை மக்கள் நன்கு புரிந்துள்ளனர்.என்று தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான மேலும் மலையக பல்கலைக்கழகம்,நீர் கட்டணக் குறைப்பு என்பன தொடர்பிலும் அவர் கருத்துக் கூறினார்.