கல்குடா யானைக்கல் கடலில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு
எம்.எஸ். எம். முர்ஷித்
UPDATED: Apr 29, 2024, 5:45:29 PM
கல்குடா யானைக்கல் கடலில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போன நபர் ஒருவர் இன்று (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (28) குளித்துக் கொண்டிருந்த போதே அதில் ஒருவர் காணாமல் போனார்.
இவ்வாறு காணாமல் போன நபரை கல்குடா டைவர்ஸ் அணியினர் மற்றும் அக்கீல் அவசர உதவி குழுவினர் நேற்று 3 மணிநேரம் தேடியும் அந்நபர் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அக்குழுவினர் இன்று திங்கட்கிழமை தீவிர தேடுதலின் பின்னர் நீரில் மூழ்கிய நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடலில் மூழ்கி உயிரிழந்தவர் மட்டக்களப்பு பகுதியில் பினான்சியல் கம்பனியில் கடமையாற்றுபவராவார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சில ஊடகங்களில் பாசிக்குடாவில் மூழ்கி மரணித்துள்ளதாக செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பவம் கல்குடா யானைக்கல் பகுதியில் இடம்பெற்றதா இலங்கை சுற்றுலா அதிகார சபையின் பாசிக்குடா சுற்றுலா விடுதி முகாமையாளர் எம்.மாஹீர் சுட்டிக் காட்டி தெரிவித்துள்ளார்.
பாசிக்குடா கடற்கரை பகுதியில் பொலிஸார் மற்றும் கடற்படையினரின் கண்காணிப்பில் குறிப்பிட்ட எல்லைக்குள் மாத்திரம் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
ஆனால் குறித்த சம்பவம் இடம்பெற்ற கல்குடா யானைக்கல் பகுதியானது பாதுகாப்பற்ற பிரதேசமாக காணப்படுவதுகின்றது. அவ்வாறு தெரிந்தும் குளிப்பது மிகவும் ஆபத்தான விடயமாகும்.
எனவே பாசிக்குடா கடலில் இடம்பெற்றதாக பிரசுரிக்கப்பட்ட சம்பவம் பிழையானது என்றும் இது யானைக்கல் பகுதியில் இடம்பெற்றது என்று பிழையை சுட்டிக்காட்டினார்.