- முகப்பு
- சிறப்பு கட்டுரை
- காலநிலை மாற்றத்தின் மூலம் இழக்கப்படும் நாட்டின் மொத்த உற்பத்திக்கான பங்களிப்பினை தக்க வைக்க வேண்டும்
காலநிலை மாற்றத்தின் மூலம் இழக்கப்படும் நாட்டின் மொத்த உற்பத்திக்கான பங்களிப்பினை தக்க வைக்க வேண்டும்
Irshad Rahumathulla
UPDATED: Jul 15, 2024, 7:58:02 AM
கொழும்பு பல்கலைக்கழகம்,ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் உதவியுடன் முதற் செயற்திட்டம் கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பம்
இயற்கையானது மனித தேவைகளுக்காக படைக்கப்பட்டதொன்று என்பதை மனிதர்கள் புரியாமல் செயலாற்றுகின்ற போதே இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன என்ற உண்மையினை இன்னும் பலர் புரியாமல் செற்படுவதை அவதானிக்க முடிகின்றது.
இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்பதாக இயற்கையுடன் கூடிய கால நிலையினை பின்னோக்கி பார்ப்போமெனில் அது அருளாகவே இருந்திருக்கின்றது.
இவ்வாறானதொரு சூழலில் நாம் பார்க்கின்ற கால நிலையான வெயில்,மழை என்பன மனித தேவைகளுக்கு போன்று பயிர் பச்சைகளின் உற்பத்திக்கும் இன்றியமையாததொன்றாகவே அமைந்திருந்தது.
மனிதர்களின் முறையற்ற செயற்பாடுகளானது இயற்கையின் மாற்றத்திற்கு பிரதானதொரு வழிகோலாக மாறியுள்ளதை தற்போதைய பல்வேறு கால நிலை மாற்றங்கள் சுட்டிக்காண்பிக்கின்றது.இதில் இருந்து மக்களையும்,மனித பயன்பாட்டுக்கான உற்பத்திகளையும் பாதுகாப்பது மிகவும் அத்தியவசியமான கடமையாக மாறியுள்ளது.
குறிப்பாக புத்தளம் மாவட்டத்தை பொறுத்தவரையில் எல்லைப் புர கிராமமான கல்பிட்டி பிரதேசம் இவ்வாரான இயற்கை அழிவுகளை அடிக்கடி சந்தித்து வருவதால் விவசாயம்,கடற்றொழில்,மற்றும் சுயதொழில் முயற்சி துறைகள் என்பன மிகவும் பின்னடைவினை சந்தித்துள்ளது.இதனால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிட்டதை இங்கு பதிவிடுவது பொருத்தமாகும்.
கால நிலை மாற்றம் தொடர்பில் மக்களை தெளிவூட்டுவது இன்றியமையாததொன்றாக இருப்பதை அவதானித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் கற்கைப் பிரிவானது கால நிலை மாற்றம் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர ( SME ) தொழில் முயற்சிகளுக்கு ஏற்படும் தாக்கங்கள் மற்றும் அவற்றை குறைப்பதற்கான உபாயங்கள் மற்றும் அது தொடர்பான நிதி வசதிகள் பற்றிய பயிற்ச்சிப்பட்டறை ஒன்றினை கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் இரு பிரிவுகளாக நடத்தியது.
கல்பிட்டி பிரதேச செயலகத்திலும்,நாவற்காடு மண்டபத்திலும் இந்த செயலமர்வுகள் கடந்த 13 ஆம் ( 13.07.2024) இடம் பெற்றது.குறிப்பாக இந்த செயலமர்வில் சிறிய மற்றும் நடுத்தர தொழிற் முயுற்சியாளர்களான பெண்கள் பங்கெடுத்தமை முக்கியமானதாகும்.
இவ்வாறான தொழில் முயற்சியாளர்களை மேலும் ஊக்குவிக்கும் பல திட்டங்களை இலங்கைக்குள் நடை முறைப்படுத்திவரும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் (UNDP) இதனை ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை செய்ய கொழும்பு பல்கலைக்கழத்திற்கு பாரப்படுத்தியமையானது மிகவும் சிறப்பானதொரு முன்னெடுப்பாகும்.
இரு அமர்வுகளாக இடம் பெற்ற மேற்படி செயலமர்வில் பங்கெடுத்த பெண் தொழில் முயற்சியாளர்கள் தங்களது அனுபவங்களை குழு கலந்துரையாடல் மூலம் முன் வைத்ததில் இருந்து எடுகோல் சிலவற்றை இங்கு பார்ப்பது பொருத்தமாகும்.
வளம் கொழிக்கும் விவசாய பூமியான கல்பிட்டி பிரதேசம் அண்மைக்கால முறையற்ற கால நிலையினை சந்தித்து வருகின்ற இம்முயற்சியாளர்கள் முன் வைத்த முக்கிய கருவாகும்.
இதில்,
மீன்பிடி,விவசாயம்,கைத்தொழில்,கால் நடை என்கின்ற தலைப்புக்களில் தமது தொழில் துறைகள் எதிர் நோக்கும் சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்ற கேள்வியினை முன் வைத்தனர்.
இதனை தவிர்ப்பதற்கு கால நிலை மாற்றம் என்கின்ற புதியதொரு தலைப்பை அவர்கள் கற்றுக் கொள்வதின் மூலம் இந்த பாதிப்புக்களுக்கு கட்டுப்பாட்டினை ஏற்படுத்த முடியும் என்கின்ற விடயத்தை இந்த செயலமர்வின் மூலம் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டியமை இதனது முதற் படியாகும்.
இலங்கையின் பொருளாதாரத்தில் மொத்த தேசிய உற்பத்திக்கு ( GDP ) விவசாயம் எவ்வாறு முக்கியப் பங்களிப்பினை வழங்கின்றதோ,இதற்கு சமாந்தரமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் பங்கு எவ்விதத்திலும் குறைந்தவையல்ல என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.இது 52 சதவீதமாகும்.
விவசாயம்,கால்நடை,கடற்றொழில் என்ற பிரிவுகளில் முயற்சியாளர்கள் எதிர் கொள்ளும் கால நிலை மாற்றத்தின் ஊடான இழப்புக்களை கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தி இதனை தடுக்க அவர்கள் எடுக்க வேண்டிய எதிர் செயற்பாடுகள் அறிவு சார்ந்த ரீதியில் அமையப் பெறல் என்ற விடயம் பிரதான அம்சமாக விவரிக்கப்பட்டது.
கொவிட் தொற்றினால் வலுவிழந்து போன துறைகளில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் இழப்புக்கள் நாட்டின் பங்களிப்புக்கு பாதகமாக இருந்தன.இதே போன்று தற்போதை புதிய வடிவில் உருவாகியிருக்கின்ற கால நிலை மாற்றமானது இத்துறைகளை மேலும் முடக்கும் அளவுக்கு பயணிக்கின்றது என்ற செய்தி தற்போது எங்கும் பேசப்படுகின்றது.
எனவே இந்த சந்தர்ப்பத்தில் அறிவு சார்ந்த தெளிவின் மூலம் தொழில் முயற்சியாளர்களை அறிவூட்டுவது தான் இந்த செயலமர்வின் அடிப்படை நோக்கமாக இருந்துள்ளைமை புலனாகின்றது.
ஆக்கம் -
எஸ்.ஆர்.எம்.எம்.இர்ஷாத் சிரேஷ்ட ஊடகவியலாளர் இலங்கை