சிசுவின் பாலினத்தை அறியும் கும்பலை  சுகாதாரத் துறையினர் காரில் துரத்தி பிடித்தனர்.

மாரியப்பன்

UPDATED: Jul 26, 2024, 5:42:38 AM

தர்மபுரி மாவட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கும்பல் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து சொல்லிவருவதாகவும், அக்கும்பல் மொபைல் டீம் போல் செயல்படுவதாகவும் அம்மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது.

இதனால் உஷார் அடைந்த தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்தகும்பலை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் அந்த கும்பல் காரில் கர்ப்பிணி பெண்களை அழைத்து சென்றுகொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறியும் கும்பல்

இதனை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட காரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

கார் சேலத்தை கடந்து பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தில் தேவேந்திரன் என்பவரது கட்டிடத்தில் எம்ஜி மெடிக்கல் வந்துள்ளது.

மெடிக்கல் மாடியில் கர்ப்பிணி பெண்களை அழைத்துச்சென்ற கும்பல் அங்கு கையடக்க ஸ்கேன் மெஷின் மூலம் கருவில் இருக்கும் பாலினத்தை கண்டறியும் பரிசோதணையில் ஈடுபட்டது.

சுகாதாரத்துறை அதிகாரிகள்

அப்போது அங்கு வந்த தர்மபுரி சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதணை நடைபெற்ற மேல்மாடியை சுற்றிவளைத்து பரிசோதனை செய்தவரையும் நான்கு கர்ப்பிணி பெண்களையும் பிடித்து விசாரித்தனர்.

அதில் கடலூர் மாவட்டம் கட்சி மேலூரை சேர்ந்த முருகன் என்பவர் பரிசோதனைக்கு ரூ15ஆயிரம் பெற்றுக்கொண்டு கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து சொல்வதும் அவர் எம்ஏ படித்துவிட்டு சட்டவிரோத செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

கர்ப்பிணி பெண்கள்

மேலும் கர்ப்பிணி பெண்களை விசாரித்ததில் அவர்கள் நான்கு பேருக்கும் தலா 2 பெண்குழந்தைகள் இருப்பதாகவும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து சொன்ன முருகன் கைது செய்யப்பட்டு தப்பியோடிய மூன்று ஏஜெண்டுகள் தேடப்பட்டுவருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended