- முகப்பு
- மாவட்டச் செய்தி
- அலுவலகம் இன்றி அதிகாரிகள் நியமனம் எஸ். இ. அலுவலகத்துக்காக இடம் தேடும் மின் அலுவலர்கள் 25 ஆண்டு கோரிக்கை இழுபறி.
அலுவலகம் இன்றி அதிகாரிகள் நியமனம் எஸ். இ. அலுவலகத்துக்காக இடம் தேடும் மின் அலுவலர்கள் 25 ஆண்டு கோரிக்கை இழுபறி.
ராஜ் குமார்
UPDATED: Jun 27, 2024, 5:37:08 AM
திருவள்ளூர் மின் பகிர்மான வட்டத்திற்கு அதிகாரிகள் மட்டும் நியமிக்கப்பட்டதால் கட்டமைப்பு வசதிக்காக அதிகாரிகள் அலைந்து திரிகின்றனர்.
இதனால் 25 ஆண்டு கோரிக்கை இழுபறியில் உள்ளது.
மின் மேற்பார்வை பொறியாளர் மற்றும் 75 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்ற வாடகை கட்டடம் தேடப்பட்டு வருகிறது.
மிகப்பெரிய மாவட்டமாக இருந்த செங்கை எம்.ஜி.ஆர் .மாவட்டத்தில் இருந்து கடந்த 1999 ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக உதயமானது.
மாவட்டத்தின் முதல் ஆட்சித் தலைவராக ஜெயஸ்ரீ ரகுநந்தன் பதவி ஏற்றார்.
மாவட்டம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்தும் மின் பகிர்மான வட்ட மின் மேற்பார்வை பொறியாளர் நியமிக்கப்படாமல் அலுவலகம் திறக்கப்படாமல் இருந்தது.
இதனால் காக்களூர் தொழிற்பேட்டை, திருமழிசை தொழில்பேட்டை ,விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் உள்பட 50 லட்சத்துக்கும் மேட்பட்ட மின் உபயோகிப்பாளர்கள் தங்கள் குறைகளை தீர்த்துக் கொள்ள காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் அலுவலகத்திற்கு சென்று வர வேண்டிய கட்டாயம் நீடித்தது.
புதிதாக மின் மாற்றி அமைக்க, புதிய இணைப்பு கொடுப்பதற்கு மின் கம்பங்கள் நட, புதிய மின் மீட்டர்கள் பொருத்தப்பட பல மாதங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.
இது குறித்து முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி,ஜி, ராஜேந்திரன், மற்றும் ஏற்கனவே இருந்த சட்டப்பேரவை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் திருவள்ளூர் மின் பகிர்மான வட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அவசியம் என அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மின்வாரியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் நடவடிக்கை எடுத்து திருவள்ளூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளராக ஏ. செல்வம் மற்றும் மின் அலுவலகங்களில் உபரியாக இருந்த உதவி பொறியாளர்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட 57 பேர் கடந்த 15 .3 .2024 அன்று இந்த மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர்
கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தி தராததால் அவர்கள் இதுவரை பதவி ஏற்க வில்லை.
ஜூலை 1- ம் தேதி திருவள்ளூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் மின் மேற்பார்வை பொறியாளர் ஏ .சேகர் பதவி ஏற்கிறார்.
இந்நிலையில் அதிகாரிகளும், அலுவலர்களும் கட்டட வசதிக்காக வீதி வீதியாக அலைகின்றனர்.
திருவள்ளூர் ரயில்வே கேட் மேம்பாலம் அருகே உள்ள பாழடைந்த தனியாருக்கு சொந்தமான (இதற்கு முன் டிவிஎஸ் மோட்டார் பைக்குகள் விற்பனை நிலையமாக இருந்த) கட்டடத்தை பார்த்துள்ளனர்.
இதில் அனைத்து அலுவலர்களுக்கும், பொருட்கள் இருப்பு வைப்பதற்கும் கட்டடம் போதுமானதாக இருக்குமா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
எதுவாக இருந்தாலும் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட கட்டடமாக மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலக கட்டடத்தை தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் கட்டித் தர வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட மின் பகிர்வோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.