அமைச்சர் பந்துல குணவர்தனவின் கிரெடிட் கார்டை கொண்டு பல பொருட்கள் கொள்வனவு விசாரணை ஆரம்பம்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Jul 31, 2024, 1:41:00 AM
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் கிரெடிட் கார்டில் இருந்து பொருட்களை எடுத்துச் சென்ற சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் நேற்று (30ஆம் திகதி) உத்தரவிட்டுள்ளது.
இலக்கம் 142, ஜம்புகஸ்முல்ல மாவத்தை, நுகேகொடவில் வசிக்கும் அமைச்சர் பந்துல குணவர்தன செய்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் பரிசோதகர் நிரோஷன் லக்மால் நீதிமன்றில் அறிக்கை தெரிவித்த போதே கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல இந்த உத்தரவை பிறப்பித்தார்.
முறைப்பாட்டாளரான அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு சொந்தமான இலங்கை வங்கியின் கடன் அட்டையின் நம்பிக்கை மீறல், மோசடி மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முறைப்பாடு செய்த அமைச்சரின் கிரெடிட் கார்டு தொடர்பான பரிவர்த்தனைகள் உள்ளிட்ட கணக்கு விவரங்களை வழங்குமாறு அந்த வங்கியின் மேலாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் கோரினர்.
உரிய வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற சிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.