தனது மாமியாரை தாக்கி பணம் நகைகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது
ராமு தனராஜா
UPDATED: Oct 21, 2024, 12:55:17 PM
நமுனுகுல தன்னகும்புர மேற்பிரிவில் தனது மாமியாரை தாக்கி விட்டு பணம் ,நகைகள் ஆகியவற்றை திருடியதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை கைது செய்து இன்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது சந்தேக நபரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
37 சி.வி 2 பிரிவு கனவரல்ல நமுனுகுலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 18 ம் திகதி நமுனுகுலை தன்னகும்புர மேற்பிரிவில் அமைந்துள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்ற குறித்த நபர் அங்கு அலுமாரியில் வைக்கப்படுடிருந்த 45000 ரூபாய் பணமும் 330000 பெறுமதியான தங்க நகைகளையும் திருடும் போது மாமியார் கண்டதாகவும் கண்டவுடன் அதிர்ச்சி அடைந்த சந்தேக நபர் விறகு கட்டை ஒன்றை எடுத்து மாமியாரின் தலையில் சுமார் 6 முறை பலமாக தாக்கி விட்டு மாமியாரின் கழுத்தில் உள்ள தாலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
67 வயதுடைய நமுனுகுலை தன்னகும்புர மேற்பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் பதுளை பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதன்போது சந்தேக நபரை மோப்ப நாயின் உதவியுடன் குறித்த பெண்ணின் வீட்டில் பெண்ணை தாக்கிய விறகு கட்டையை மோப்பம் பிடித்த மோப்ப நாய் சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கனவரல்ல சி.வி.2 பகுதியில் அமைந்துள்ள சந்தேக நபரின் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் இதன்போதே குறித்த சந்தேக நபரை நேற்றைய தினம் கைது செய்ததாகவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது நகைகளை பசறை பகுதியில் உள்ள தனியார் ஈட்டுக்கடை ஒன்றில் அடகு வைத்துள்ளமைக்கான பற்றுச்சீட்டு கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ALSO READ | வயல் பகுதியில் யானைக் குட்டியொன்று உயிரிழப்பு
மேலதிக விசாரணைகளை ஹிங்குருகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.