• முகப்பு
  • அரசியல்
  • அரசு பெண் மருத்துவரை ஹிஜாபை கழற்ற சொல்லி ரகளையில் ஈடுபட்டதாக பாஜக பொறுப்பாளர் மீது புகார்.

அரசு பெண் மருத்துவரை ஹிஜாபை கழற்ற சொல்லி ரகளையில் ஈடுபட்டதாக பாஜக பொறுப்பாளர் மீது புகார்.

செ.சீனிவாசன்

UPDATED: May 26, 2023, 8:57:32 AM

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி சிந்தாமணியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை நெஞ்சுவலி காரணமாக அதே பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ்ராம் என்பவர் திருப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு 12 மணிக்கு கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அங்கு இருந்த மருத்துவர் ஜன்னத் மற்றும் செவிலியர்கள் சுப்ரமணியை பரிசோதித்து நாகை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப அறிவுறுத்தி உள்ளனர்.

இதனை கேட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்ராம் மேல் சிகிச்சைக்கு அனுப்பாமல் இங்கேயே மருத்துவம் பார்க்க வேண்டும் என தனது செல்போனில் வீடியோ எடுத்தபடியே வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஹிஜாப் எதற்கு அணிந்துள்ளீர்கள் என்று பேசியும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

பாஜக நிர்வாகி இரவு நேரத்தில் இஸ்லாமிய பெண் அரசு மருத்துவரிடம்  ரகளையில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதனை அறிந்த உள்ளூர் பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை திருப்பூண்டி பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கம்யூனிஸ்ட், விசிக, மமக, மஜக, உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். 

அரசு மருத்துவரை ஹிஜாபை கழற்ற சொல்லி ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்வராம் மீது அரசு மருத்துவரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மத உணர்வை தூண்டுவது,

பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்களை அனுமதியில்லாமல் வீடியோ எடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் விரைந்து கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து கைது செய்வதாக உறுதி அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.

கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் நாகையில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண் அரசு மருத்துவரை ஹிஜாபை கழற்ற வற்புறுத்தி பாஜக நிர்வாகி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended