• முகப்பு
  • இலங்கை
  • அரச சட்டவாதி ஸக்கி இஸ்மாயில் சட்ட முதுமானி பட்டம் பெற்றார்

அரச சட்டவாதி ஸக்கி இஸ்மாயில் சட்ட முதுமானி பட்டம் பெற்றார்

அஷ்ரப் ஏ சமத்

UPDATED: Jan 25, 2024, 4:16:27 AM

 

நிந்தவூரைச் சேர்ந்த அரச சட்டவாதி ஸக்கி இஸ்மாயில் அவர்கள் தனது சட்டமுதுமானி பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கற்கைகள் - 2022 ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஸக்கி இஸ்மாயில் தனது சட்டமானி பட்டத்தினை கொழும்பு பல்கலைக்கழகத்தில் 2010ம் ஆண்டு பூர்த்தி செய்திருந்ததுடன் 2011 ம் ஆண்டு இலங்கை உச்சநீதிமன்ற சட்டத்தரணியாக உறுதிப்பிரமாணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் 2009/2010 ஆண்டு கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்தின் பொது மற்றும் சர்வதேச சட்ட பிரிவினால் 02 வருட கால “மோதல்கள் நிறைந்த சமூகங்களில் அதிகாரப் பரவலாக்கம் மற்றும் சமூகங்களுக்கிடையில் பதட்டங்கள்/ விரோதங்களைக் குறைப்பதில் இத்தகைய செயல்முறையின் செயல்திறன் ஆகியவற்றின் ஒப்பீட்டு ஆராய்ச்சி" நிகழ்வில் உதவி ஆய்வாளராக பணியாற்றியிருந்தார். இவ்வாய்வானது நேபாளம், பிலிப்பைன் மற்றும் இலங்கை நாடுகளை சேர்ந்த அறிஞர்களினால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 2010 ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் மனித உரிமைகளுக்கான கற்கை நிலையத்தின் திட்டம் மற்றும் கற்கைகளுக்கான இணைப்பாளராக கடமையாற்றியதுடன் அங்கு காதிகளுக்கான பயிற்சி திட்டங்கள், மனித உரிமை மற்றும் சமாதான டிப்ளோமா கற்கை நெறிகள், மற்றும் மனித உரிமைகள் மற்றும் சனநாயகப்படுத்தல் முதுமானி கற்கை முதலியவற்றுக்கு பொறுப்பாக பணியாற்றினார்

2011 ம் ஆண்டு டானிஸ் அகதிகள் பேரவையில் (Danish Refugees’ Council-DRC) சட்ட பாதுகாப்பு அலுவலராக ( Legal Protection Officer) இணைந்துகொண்ட இவர் அந்நிறுவனத்தின் முழு வடமாகாணத்துக்குமான பொறுப்பாளராக யுத்தத்தின் பின்னரான மனிதாபிமான நடவடிக்கைகளின் போதும், மீளகுடியமர்த்தலின் போதும் பணியாற்றினார். 

இதன்போது சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக யுனிசப் நிறுவனத்தினால் டென்மார்க் நாட்டில் 7 நாட்கள் இடம்பெற்ற ஆய்வு மாநாட்டில் டானிஸ் அகதிகள் பேரவையின் (DRC) இலங்கை பிரதிநிதியாக கலந்துகொண்டு இலங்கையில் யுத்தத்தின் பின்னராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நிலைமை தொடர்பாக ஆய்வு அறிக்கை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பின்னர் 2013 ம் வருடத்திலிருந்து இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக பணிபுரிந்து வருகின்ற இவர், இலங்கையின் பல்வேறு மேல்நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளில் வழக்குத்தொடுநராக கடமையாற்றிய அனுபவங்களை கொண்டவராவார். 

இவர் தனது சட்டமுதுமானி பட்டத்திற்கான ஆய்வினை இஸ்லாமிய (ஷரீஆ) சட்டத்தில் உடல்ரீதியான தண்டனை, கல்லெறிதல் மற்றும் மரண தண்டனை முதலியன குறித்து இஸ்லாமிய குற்றவியல் நீதிமுறை (Islamic Criminal Justice System) எவ்வாறு அணுகுகின்றது என்பது குறித்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு தனது சட்டமுதுமானி கற்கைக்காக இவர் குற்றவியல் நீதி (Criminal Justice) தீங்கியல் சட்டம் ( Law of Delict) மற்றும் சர்வதேச இராணுவ சட்டம் (International Humanitarian law/International Rules of Military Operations) ஆகியவற்றை தேர்வு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended