• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மண்டபம் இரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் ஒன்று மட்டும் இருப்பதால் பயணிகள், குழந்தைகள் நெடுநேரம் காத்திருக்கும் அவலம்.

மண்டபம் இரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் ஒன்று மட்டும் இருப்பதால் பயணிகள், குழந்தைகள் நெடுநேரம் காத்திருக்கும் அவலம்.

மாமுஜெயக்குமார்

UPDATED: May 16, 2023, 2:14:30 PM

இந்தியாவில் அதிக முதலீடு தரும் நிறுவனம் இரயில்வே துறையாகும். இரயில்வே பயணிகளை திருப்திபடுத்தும் வகையில் இந்திய இரயில்வே துறையில் பற்பல சலுகைகளையும், வசதிகளையும் செய்து வருவதை நாம் கண் கூடாக காண முடியும்.

இதனிடையே, இந்தியாவின் புண்ணியஸ்தலங்களில் முக்கியமானது ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஆகும்.

ராமேஸ்வரத்திற்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டினரும் வந்து கடலில் குளித்து,28 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, இராமநாத சுவாமியை தரிசனம் செய்வதுடன், இராமர் பாதம், தனுஷ்கோடி சென்று ரசிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந் நிலையில், மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரையில் சுமார் 2 கி.மீ. தூரம் கடலினுள் பிரிட்டிஷ் ஆட்சியில் அமைக்கப்பட்ட இரயில்வே பாலம் அதன் வலிமையை இழந்ததால் அதன் அருகே புதிய இரயில்வே பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அதனையொட்டி, கடந்த 3 மாதத்திற்கு மேலாக ராமேஸ்வரத்திற்கு சென்னையில் இருந்து தினமும் வரும் 2 இரயில்கள், வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் திருப்பதி, கன்னியாகுமரி இரயில்கள் மண்டபம் இரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு, அங்கிருந்து இயக்கப்படுகிறது.

மேலும், மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு தினமும் இயக்கப்படும் 3 இரயில்கள், வாராந்திர இரயில்கள் ராமநாதபுரம் இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இயக்கப்படுகிறது.

மண்டபத்தில் இருந்து இரயில்கள் இயக்கப்படும்போது இரயிலில் பயணம் செய்ய வடநாட்டு பயணிகள் உள்பட இரயில்வே பயணிகள் பெரும் திரளாக திரண்ட வண்ணமாய் உள்ளனர்.

மண்டபம் இரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் இரயில் டிக்கெட் கவுண்டர் ஒன்றே ஒன்று மட்டுமே இருப்பதால், பயணிகள், குழந்தைகள், முதியவர்கள் அவர்கள் கொண்டுவரும் பொருட்களுடன் வெகு நேரம் காத்திருக்கக்கூடிய அவலமாக உள்ளது.

பயணிகளின் அவலத்தை போக்கும் வகையில், புதிய இரயில்வே பாலம் கட்டி முடிக்கப்பட்டு, பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும் வரையிலும் மண்டபம், ராமநாதபுரம் இரயில் நிலையங்களில் கூடுதலாக டிக்கெட் கவுண்டர் அமைத்து பயணிகளின் சிரமத்தையும், அவலத்தையும் போக்க முன் வர வேண்டுமென பயணிகள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended