தஞ்சை - பாபநாசம் - கும்பகோணம் வழியாக மும்பைக்கு நேரடி சிறப்பு ரயில் அறிமுகம்.

ஆர்.தீனதயாளன்

UPDATED: May 25, 2023, 7:39:18 PM

தஞ்சை - பாபநாசம் - கும்பகோணம் வழியாக மும்பைக்கு நேரடி ரயில் இயக்க பல ஆண்டுகளாக தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் , பாபநாசம் இரயில் பயணிகள் சங்கம் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது.

அதேபோல் காஞ்சிபுரம் வழியாக தமிழகத்தில் உள்ள முக்கிய திருத்தலங்கங்களை இணைத்து நேரடி ரயில் இயக்க சங்கர மடத்தின் சார்பில் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் கால்நடைத்துறை இணை அமைச்சர் முனைவர் எல். முருகன் அவர்களிடம் கோரிக்கை விடப்பட்டது.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பாரதி மோகன், தற்போதைய எம்.பி க்கள் ராமலிங்கம்(மயிலாடுதுறை), சண்முகம் மற்றும் கல்யாணசுந்தரம் (ராஜ்ய சபை), கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், மகாராஷ்டிரா மாநிலம் சியான்-கோலிவாடா எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்ச்செல்வன்,

மும்பை தமிழின ரயில் பயணிகள் சங்க தலைவர் மற்றும் சிவசேனா கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட பல மக்கள் பிரதிநிதிகள் தஞ்சை-மும்பை இடையே நேரடி ரெயில் இயக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து தற்போது மும்பை சத்திரபதி சிவாஜி மகராஜ் முனையம் - தூத்துக்குடி இடையே கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக நேரடி ரெயில் இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் இன்று (மே 26) மற்றும் ஜூன் 2ம் தேதி ஆகிய தினங்களில் மும்பையில் மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு ரேணிகுண்டா(சனிக்கிழமை) காலை 8.05 மணி, திருத்தணி(9.03 மணி) காஞ்சிபுரம்(10.08 மணி) கும்பகோணம் (மாலை 3.45 மணி) பாபநாசம் 3.59 மணி) தஞ்சாவூர் (4.23 மணி) மதுரை(7.55 மணி) வழியாக தூத்துக்குடிக்கு இரவு 11.00 மணிக்கு சென்றடையும்.

மறு மார்க்கத்தில் தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (மே 28 மற்றும் ஜூன் 4) அதிகாலை 4.00 மணிக்கு கிளம்பி மதுரை காலை 6.30 மணி, தஞ்சாவூர் 9.55 மணி, பாபநாசம் 10.19 மணி, கும்பகோணம் 10.32 மணி, காஞ்சிபுரம் மாலை 3.58 மணி, திருத்தணி 4.58 மணி, ரேணிகுண்டா 6.40 மணி வழியாக மும்பைக்கு திங்கள் மதியம் 3.40 மணிக்கு சென்றடையும்.

கோடைகால நெரிசலை முன்னிட்டு சோதனை அடிப்படையில் இந்த சிறப்பு ரயில் இரண்டுமுறை மட்டும் இயங்கும். பயணிகள் பயன்பாட்டினை பொறுத்து பின்னர் இதன் இயக்கம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த ஒரே ரயில் இயக்கத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள் நீண்ட நாட்களாக கோரி வந்த மும்பை, திருத்தணி, காஞ்சிபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு நேரடி ரயில் இணைப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இதனால் பயணிகள் பெரும் பயனடைவார்கள். பயணிகள் கோரிக்கையை ஏற்று பல இடங்களுக்கு புதிய நேரடி ரயில் இணைப்பை ஏற்படுத்தி கொடுத்த ரயில்வே நிர்வாகத்திற்கு தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் , பாபநாசம் இரயில் பயணிகள் சங்கம் நன்றி தெரிவித்து கொள்கிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended