100 கோடி மதிப்பு நிலத்தை மீட்க கவுன்சிலரின் போராட்டம் : திரளாக குவிந்த பெண்கள்

ஆனந்த்

UPDATED: Sep 18, 2024, 7:27:12 PM

சென்னை நெற்குன்றம்

145வது வார்டு என்.டி.பட்டேல் சாலையில் உள்ள ரூபாய் 100 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 14 செண்ட் அரசு நிலத்தை மீட்கும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

145வது வார்டு பகுதியின் அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் முன்னெடுத்த, ‘நெற்குன்றம் மண் நெற்குன்றம் மக்களுக்கே’ என்ற இந்த போராட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட திரளான மக்கள் பங்கேற்றனர். 

போராட்டத்தின்போது தனியார் வசமுள்ள அந்த இடத்தை மீட்டு அங்கு அரசு சார்பில் சமூக நலக்கூடமும், மகளிர் சுய தொழில் கட்டமும் கட்ட வேண்டும் என வலியுறுத்தப்படது.

அப்போது அங்கு வந்த போலீசார் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவதற்கு இந்த இடத்தில் அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் கவன ஈர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

இதற்கிடையே போராட்டத்தின் போது சுமார் நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிந்ததால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கவுன்சிலர் சத்யநாதன், "1962 ஆம் ஆண்டு நெற்குன்றம் பகுதியில் உள்ள 1.14 ஏக்கர் அரசு நிலத்தை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளனர்.

ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆசிரமம் கட்டுவதற்காக அந்த இடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த இடத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக எந்தவித கட்டிடமும் கட்டப்படவில்லை.

ஒருவேளை கட்டப்பட்டிருந்தால் குத்தகை முடிந்த பின்னர் இடத்தை மீட்கும் போது கட்டப்பட்ட கட்டிடத்திற்காக இழப்பீடு கொடுத்து இடத்தை மீட்டுக் கொள்ளலாம் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களுடன் கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சராக இருந்த பா பெஞ்சமின் அவர்களிடம் நான் தெரிவித்து, சட்டப்படி அந்த இடத்தை மீட்டேன்.

இந்த நிலையில் மீண்டும் அந்த இடம் குத்தகைதாரர்கள் வசம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதற்காக அரசு தரப்பில் வாதாட வேண்டிய வட்டாட்சியர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளும் உரிய முறையில் நீதிமன்றத்தில் வாதிடவில்லை.

அந்த இடத்தை மீட்டால் அங்கு மக்களுக்கு ஒரு சமுதாய நலக்கூடமோ அல்லது மகளிர் தொழில் செய்வதற்கு ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தோம்.

ஆனால் சென்னை மாநகராட்சியில் ராஜரத்தினம் அரங்கம் வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட இடங்களில் தான் போராட்டம் நடத்த வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தை கைவிட்டு உள்ளோம். ஆனால் போலீசாரின் உரிய அனுமதி பெற்று நெற்குன்றம் மக்களின் இந்த நிலத்தை நெற்குன்றம் மக்களுக்காக நான் மீட்பேன்" இன்று ஆவேசமாக தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended