வளமான நாட்டிற்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Nov 16, 2024, 12:23:10 PM
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற பொதுத் தேர்தலில், அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று மாபெரும் வெற்றியீட்டியதற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதன் பிரகாரம், இலங்கை மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சிக்குத் தேவையான பலமும், மக்களின் கனவுகள் நனவாகும் தேசத்தை உருவாக்குவதற்குத் தேவையான ஆற்றலும் தற்போதைய ஆட்சிக்கு குறைவில்லாமல் கிட்டியுள்ளது. இதன் ஊடாக ஒரு நாடாக நாம் தற்போது எதிர்நோக்கி வரும் சிரமங்களை போக்கக்கூடிய வல்லமை தற்போதைய ஆட்சிக்கு கிட்டியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், இந்நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில், தமது ஆட்சிக்காலத்தில் தமது கொள்கைகளையும் திட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதே தமது சவாலாக இருப்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர் என நாங்கள் நம்புகின்றோம்.
இவ்வாறு, “வளமான நாடு – அழகான வாழ்க்கை”என்ற அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இந்நாட்டின் 220 இலட்சம் மக்களின் அபிலாஷைகளைக் கட்டியெழுப்பும் இயலுமை அவர்களுக்கு உதயமாகட்டும் என ஐக்கிய மக்கள் சக்தியினராக நாம் பிரார்த்திக்கிறோம்.
ALSO READ | மன்னாரில் இன்று 6 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு
மேலும், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஜனநாயகத்தின் அடிப்படையிலான அனைத்து குடிமக்கள் உரிமைகளையும் பாதுகாக்கும், சமூக நீதியைப் பாதுகாக்கும் நல்லாட்சிக்காக வேண்டி, புதிய ஆட்சிக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க தயாராக உள்ளோம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகிறோம்.
தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சி அரசியல்வாதியாக அப்போது கூறியது போல், தற்போதுள்ள அரசியல் சக்திகள் மூன்றில் இரண்டு அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் சட்டங்களை இயற்றியதை மறந்துவிடக் கூடாது என்பதையும் தற்போதைய அரசாங்கத்திற்கு நினைவூட்டுகிறோம்.
இந்த தீர்மானமிக்க தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கு 1,968,716 வாக்குகளைப் பெற்றுத் தந்தும், 40 பாராளுமன்ற ஆசனங்களை வெற்றியீட்டித் தந்தும், கட்சியின் கொள்கைகள், வேலைத்திட்டம் மற்றும் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்கும், கட்சியின் வெற்றிக்காக தோள் கொடுத்த சகல தரப்பினருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வளமான நாட்டிற்குத் தேவையான அரசியல் நிகழ்ச்சி நிரல்களை தயாரித்த நாங்கள், ஐக்கிய மக்கள் சக்தியாக எதிர்காலத்திலும் இந்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மிக உன்னத ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கும் பணிக்காகவும் பெரும் அதிஷ்டானத்துடன் அர்ப்பணித்து செயற்படுவோம் என்பதை சகல இலங்கை வாழ் குடிமக்களுக்கும் சுட்டிக்காட்டுகிறோம்.
இப்பூலோகத்தில், இலங்கையின் தனித்துவ அடையாளத்தை நிலைப்படுத்த நாம் ஒன்றாய் இணைந்து நடவடிக்கை எடுப்போம்.
சஜித் பிரேமதாச
தலைவர்,
ஐக்கிய மக்கள் சக்தி/ ஐக்கிய மக்கள் கூட்டணி.