• முகப்பு
  • இலங்கை
  • மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணிகளில் எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளியோம்! மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே

மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணிகளில் எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளியோம்! மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 2, 2024, 11:05:51 AM

மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்தார்.

மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உறுமய வேலைத் திட்டத்திற்கு இணைந்த வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இதனைத் தெரிவித்தார்.


இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே,

“விவசாயத்துறை சார் பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் அதனுடன் இணைந்து செயற்படும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்குகின்றது. இதன்படி தேயிலை, இறப்பர் மற்றும் தேங்காய் உட்பட சிறு ஏற்றுமதிப் பயிர்கள் உள்ளிட்ட அனைத்துவித விவசாய உற்பத்திகளும் இந்த இமைச்சின் கீழ் உள்ளன. 

அதேபோன்று இந்நாட்டில் 10 பாரிய அணைகள் இருக்கின்றன. அவை இந்நாட்டு நீர்மின்சார உற்பத்திக்கும் நீர்ப்பாசனத்த்திற்கும் பாரிய அளவில் பங்களிக்கின்றன. எனவே இந்த இரு அமைச்சுக்களையும் நாம் முறையான வகையில் செயற்படுத்துவதுடன், நவீன விவசாய பொறிமுறைகளுடன் கூடிய அடித்தளத்தை இடுவோமாயின் எதிர்காலத்தில் எமது நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய முடியும் என்பது எனது நம்பிக்கையாகும். 


அதற்காக தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் விவசாய அமைச்சும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன் மூலம் இவற்றின் செயற்பாடுகளை மிகவும் இலகுவாக முன்னெடுக்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோன்று விவசாய நடவடிக்கையுடன் தொடர்புடைய மகாவலி அபிவிருத்தி அதிகார சபை தொடர்பான அமைச்சும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது இவற்றின் செயற்பாடுகளை செயற்திறன்மிக்க வகையில் முன்னெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

ஒரு சில இடங்களில் கைவிடப்பட்டுள்ள சுற்றுலா பங்களாக்களை புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மிகவும் அழகான சுமார் 30 பங்களாக்களும் உள்ளன. அத்துடன், மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணி தொடர்பில் சிக்கல்கள் காணப்படுகின்றன.

உறுமய திட்டத்தை அமுல்படுத்துவதற்கு இணையாக மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தின் அடிப்படையில் காணி உரிமைகள் இல்லாத மக்களுக்கு முழு உரிமையுடைய காணி உறுதிகளை வழங்கும் உறுமய வேலைத்திட்டம் மிக முக்கியமான வேலைத்திட்டம் என்பதைக் கூற வேண்டும். இதன் கீழ், சுமார் 25,000 காணி உறுதிகள் வழங்கும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

பொலன்னறுவை மாவட்டத்தில் மேலும் 6000 பேருக்கு இந்த வார இறுதியில் காணி உறுதிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணிகளில் சட்ட விரோத செயற்பாடுகளை மேற்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது” என்று பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மேலும் தெரிவித்தார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended