மன்னாரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டார் ரிஷாத் பதியுதீன்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Nov 25, 2024, 10:57:36 AM
மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீன், இன்றைய தினம் (25) மன்னார் மாவட்டத்தில் விஜயம் செய்தார்.
அவர், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டபின், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, ரிஷாட் பதியுதீன் கூறியதாவது:
“மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக சுமார் 7500 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுடன் நாம் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளோம். பல இடங்களில் குடியிருப்புகள் நீரில் மூழ்கி, மக்கள் உணவு சமைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டிய அவசியத்தை நாம் உணர்ந்துள்ளோம்.
அந்த வகையில், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் மேலதிக செயலக அதிகாரிகளுடன் பேசி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியமான உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோரியுள்ளோம்.
மேலும், வெள்ள நீர் அகற்றும் பணிகளை பிரதேச செயலகம், நகரசபை மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபரிடம் கேட்டுள்ளோம்.
மற்றும், எதிர்வரும் நாட்களில் நிலவும் வானிலை மோசமானதாக இருப்பதால், மக்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், பாடசாலைகளில் தங்கியுள்ள மக்களுக்கு மட்டுமே உணவுகள் வழங்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையை மன்னர் மாவட்ட அரசாங்க அதிபருக்கு எச்சரிக்கை செய்து, எப்போதும் உணவுகளுடன் கூடிய உதவிகளை வழங்குவதை உறுதி செய்யுமாறு கேட்டுள்ளோம்” என்றார்.