• முகப்பு
  • குற்றம்
  • திருநெல்வேலி நாங்குநேரியில், நகை வியாபாரி மீது மிளகாய் பொடி தூவி, 1 கோடியே 50 லட்சம் வழிப்பறி!

திருநெல்வேலி நாங்குநேரியில், நகை வியாபாரி மீது மிளகாய் பொடி தூவி, 1 கோடியே 50 லட்சம் வழிப்பறி!

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: May 30, 2023, 1:25:20 PM

திருநெல்வேலி நாங்குநேரியில், நகை வியாபாரியை காரில் பின்தொடர்ந்து வந்து, முகமூடி அணிந்த மர்ம ஆசாமிகள், மிளகாய் பொடியை தூவி, 1 கோடியே 50 லட்சம் ரூபாயை, வழிப்பறி செய்துள்ளனர்.

அதுபற்றிய விபரம் வருமாறு:-

திருநெல்வேலி டவுணை சேர்ந்தவர் கிஷாந்த். இவர் அங்கு நகை கடை வைத்துள்ளார். மேலும், ஷாப்பிங் பொருட்களையும், மொத்தமாக வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் இன்று (மே.30) அதிகாலை 6 மணியளவில், சில நகைகள் வாங்குவதற்காக, கேரள மாநிலம் "நெய்யாற்றங்கரை" என்னும் ஊருக்கு, தன்னுடைய உதவியாளர் ஒருவருடன், தன்னுடைய சொந்த காரில் சென்றுள்ளார்.

இவருடைய காரை, திருநெல்வேலியில் இருந்தே, 4 பேர் கொண்ட கும்பல், இரண்டு கார்களில், முன்னும்- பின்னுமாக தொடர்ந்து வந்துள்ளது. காலை 7 மணியளவில்,நாங்கு நேரி அருகேயுள்ள "மூன்றடைப்பு" மேம்பாலத்தில் வரும்போது, கிஷாந்த் காரை, இரண்டு கார்களில் வந்தவர்கள் வழிமறித்து, தகராறில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து, கிஷாந்த் முகத்தில் மிளகாய் பொடியை தூவியும், இரும்புக்கம்பியால் அவரை தாக்கியும், கிஷாந்த வந்த காரிலேயே, அவரை ஏற்றியுள்ளனர். அத்துடன், கிஷாந்த் காரில் இருந்த 1 கோடியே, 50 லட்ச ரூபாயையும், வழிப்பறி செய்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த பேருந்துகளை ஓட்டிவந்த ஓட்டுநர்கள், கொள்ளையர்கள் காரை விரட்டி சென்றுள்ளனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத மர்ம ஆசாமிகள், சிறிது தொலைவில் "நெடுங்குளம்" என்னும் இடத்தில், கிஷாந்தை இறக்கி விட்டு- விட்டு காரை, நாகர்கோயில் நோக்கி ஓட்டிச்சென்று விட்டனர்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த மூன்றடைப்பு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்டும் விசாரித்து வருகின்றனர்.

மிளகாய் பொடியை தூவி, நகை வியாபாரியிடம், பெருந்தொகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக, நாங்குநேரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜூ தலைமையில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.சிலம்பரசன், தெரிவித்துள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended