• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருப்பாச்சூர் ஊராட்சியில் தலை விரித்தாடும் குடிநீர் பிரச்சனை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

திருப்பாச்சூர் ஊராட்சியில் தலை விரித்தாடும் குடிநீர் பிரச்சனை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

ராஜ் குமார்

UPDATED: Jun 15, 2024, 7:09:02 PM

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்டது திருப்பாச்சூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில் இந்த ஊராட்சியின் தலைவராக சோபன்பாபு என்பவர் பதவி வகித்து வருகிறார்

இவர் மீது துணைத் தலைவர் உட்பட 12 வார்டு உறுப்பினர்களும் கடந்த நான்கு ஆண்டுகளாக பல முறைகேடுகளை செய்து அரசு பணத்தை கோடிக்கணக்கில் கையாடல் செய்தார் என்று பலமுறை புகார் அளித்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு நடத்தி இவர் செய்த முறைகேடுகளை உறுதி செய்து ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.

இவர் மீது நடவடிக்கை நிலுவையில் உள்ள நிலையில் திருப்பாச்சூர் ஊராட்சியில் இருப்பில் இருக்க வேண்டிய பழுதடைந்து பழுது நீக்கம் செய்து வைக்க வேண்டிய 10க்கும் மேற்பட்ட குடிநீர் மோட்டார்கள் மற்றும் உதிரி பாகங்கள் பழுதடைந்த மின்விளக்குகள் மாயமாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என வார்டு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்

திருப்பாச்சூர் ஊராட்சியில் உள்ள பல வார்டுகளில் குடிநீர் மின் மோட்டார்கள் பழுது ஏற்பட்டு குடிநீர் வராமல் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்

குறிப்பாக கொசவன்பாளையம் ஒன்றாவது வார்டு மற்றும் இரண்டாவது வார்டு பகுதியில் தொடர்ந்து நான்கு நாட்களாக தண்ணீர் வராததால் பெரும் அவதிக்குள்ளாகினர்.

ஊராட்சித் தலைவர் சோபன்பாபு அதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாததால் கோவம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட தயாராக இருந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்து துணைத் தலைவர் தனது சொந்த செலவில் குடிநீர் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து குடிநீர் பிரச்சினை தற்காலிகமாக தீர்த்ததாக கூறப்படுகிறது

பிறகு பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஏற்பாட்டில் கொசவன்பாளையம் இரண்டாவது வாரத்திற்கு புதிய மின் மோட்டார் அமைக்கப்பட்ட குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டது

ஒன்றாவது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்ந்து நீடித்ததால் அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை ஊராட்சி செயலர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை தொடர்பு கொண்டும் எந்த பயனும் இல்லாததால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் பின்னர் அங்கு வந்த கவுன்சிலர் ஒன்றிய குழு உறுப்பினர் நிதியிலிருந்து புதிய மின் மோட்டார் வாங்கி தருவதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது

இந்நிலையில் ஊராட்சியில் இருப்பு இருக்க வேண்டிய பழுதடைந்து சரி செய்து வைக்கப்பட வேண்டிய பத்துக்கும் மேற்பட்ட குடிநீர் மின் மோட்டார்கள் மாயமாகாமல் இருந்திருந்தால் இது போன்ற குடிநீர் தட்டுப்பாடு வராமல் தடுத்திருக்கலாம் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து முறையான ஆய்வு நடத்தி மென்மேலும் முறைகேடுகளை செய்து பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தர மறுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் சோபன் பாபு மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலே குறிப்பிட்ட புகார்கள் உண்மை எனும் தெரிய பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

 

VIDEOS

Recommended