திருவேற்காடு ஏரியின் அவலநிலை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவள்ளூர் மாவட்டத்திலேயே..... இல்லல்ல.... தமிழகத்திலேயே..... இல்லல்ல... இந்தியாவிலேயே...... இல்லல்ல..... உலகத்திலேயே வற்றாத ஏரி எது தெரியுங்களா? திருவேற்காடு நகர சின்ன கோலடி ஏரி எனும் செல்லியம்மன் நகர் ஏரி தானுங்கோ. அதன் அற்புதங்கள் என்ன? அதில் நீர் ஏன் வற்றுவதில்லை தெரியுமா? ஒருமுறை மக்கள் தங்களது வாழ்நாளில் சுற்றி பார்க்க வேண்டிய இடம் இந்த ஏரி தாங்க. இந்த ஏரியின் மகத்துவங்கள். ஏரி கரைகளை அழகழகான குப்பைகள் அலங்கரிக்கும். ஏரி வற்றி போகாத அளவுக்கு அயப்பாக்கம், சுந்தர விநாயகர் நகர், செல்லியம்மன் நகர் , அன்பு நகர் , செந்தமிழ் நகர், மற்றும் சுற்றுவட்டார மழை வடிநீர் கால்வாய் மூலமாக வந்து சேரும் ஜீவ நதி நீரான , சாக்கடை நீர் கழிவுநீர் ஆகியனவாகும். பக்கத்திலே கூவம் ஆறு இருந்தாலும் கழிவுநீர் போக வழியில்லை. திருவேற்காடு நகராட்சியோ இல்லாத சேவைகளான குடிநீர் வரி , கழிவு நீர் வரி என... கல்யாணம் பன்னாதவன் தனது பிள்ளைக்கு பேர்வைத்த கதையாக வரிக்கு பேர் வைத்து வாரி சுருட்டுகிறது. பூனைக்கு மணி யார் கட்டுவது. பால்வாடி பள்ளிக்கு பல்கலை கழகம்னு பேர் வச்சது போல திருவேற்காடு குக்கிராமத்திற்கு நகராட்சினு பேர் மட்டும் வைத்துள்ளார்கள். வரியை உயர்த்தனுமாம். நகராட்சி அலுவலர்களுக்கு லட்சத்தில் சம்பளம் தரனுமாம். மக்கள் எக்கேடு போனால் என்ன? கொசு மருந்து அடிப்பது என்றால் என்ன ? திருவேற்காடு நகராட்சியில் அது கிடையவே கிடையாது. இந்த ஏரியில் கிடைக்கும் மீன் சுவையே தனி. இந்த ஏரி ஆக்கிரமிப்பாளர்கள்கையில் 82% சென்று விட்டது. இந்த ஏரியை சுற்றி நீர்நிலை புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து போடப்பட்ட பிளாட்களான.... செல்லியம்மன் நகர் ,செந்தமிழ் நகர் , அன்பு நகர் போன்ற நகர்களில் அதிகபட்ச சமூக விரோத குற்றவாளிகளின் கூடாரங்களே கட்டிடங்களாய் உயர்ந்து நிற்கிறது. திருவேற்காடு காவல் தெய்வங்களான காவல் துறை , விஏஓ , நகராட்சி ஆணையர் , தாசில்தார் ,மாவட்ட ஆட்சியர் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆண்டு முழுதும் வரி வசூல் கவுண்டரில் மட்டும் அலுவலர் இருப்பார். நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்தால் காலி செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு இங்கே செல்லாது. நீதிபதியே நேராக வந்து சொன்னாலும் ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்ய முடியாது. காரணம்... வாக்கு வங்கி. திருவேற்காட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இடமே இப்பகுதிதான். இந்த ஏரிக்குள் 2 ஆவது மற்றும் 3 ஆவது வார்டு மக்கள் வசிக்கிறார்கள். இந்த ஏரியில் குப்பைகளும் கொட்டப்படுகிறது. குப்பைகள் நிரம்பியதும் தரைமட்டமாக ஜேசிபி பொக்லைன் எந்திரம் மூலம் நிறுவப்பட்டு பிளாட் போடப்படும். தண்ணீர் மாசு , காற்று மாசு ஒரு புறம். உயர்நீதி மன்றம் தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளை ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி சுத்தம் செய்ய தீர்ப்பளிக்கிறது. ஆனால் இந்த ஏரி மேப்ல கூட இல்லையோ என நினைக்கத் தோணுகிறது. உயர்நீதிமன்றம் தானே முன்வந்து இந்த ஏரிக்கு நல்லதொரு விமோசனத் தீர்ப்பை தருமா? என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆட்சி மாறியாச்சி காட்சி மாறுமா என்ற ஏக்கத்தில் திருவேற்காடு மக்கள் காத்து இருக்கிறார்கள்.

VIDEOS

RELATED NEWS

Recommended