• முகப்பு
  • இலங்கை
  • குடும்பத் தலைவி முதல் தொழில் முனைவர் வரை! சாதனை செய்யும் பெண்கள்

குடும்பத் தலைவி முதல் தொழில் முனைவர் வரை! சாதனை செய்யும் பெண்கள்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 2, 2024, 10:56:47 AM

இந்த உலகில் பெண்ணாக பிறப்பெடுத்து, பெண்ணாக வாழ்க்கையைக் கடந்துச் செல்வது அத்தனை இலகுவானதல்ல. அவ்வாறிருக்க ‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’என கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எதற்காக எழுதி வைத்தார்? பெண்களின் கஷ்டங்களை அறியாமல் எழுதிவிட்டாரா என்று கேட்கலாம்! 

பலவிதமான கஷ்டங்களுக்கு மத்தியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளே உலகின் நீங்கா இடம்பிடித்துள்ளன. அவ்வாறு வாழ்க்கைப் போராட்டத்திற்கு மத்தியிலும் தங்களுக்கான தனித்துவமான அடையாளத்துடன் சிறிய அளவில் வீட்டில் செய்துவந்த முயற்சிகளையும் உற்பத்திகளையும் சர்வதேச சந்தை வரை கொண்டுச் செல்ல முன்வந்திருக்கும் மூன்று பெண்களை வவுனியாவில் சந்திக்கக் கிடைத்தது. 

இவர்கள் மூவரும் வெவ்வேறான தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களின் இலக்குகள் ஒன்றாகவே இருக்கிறது. அவர்களது திறமைக்கு கிடைத்த சிறிய அங்கீகாரம் அவர்களை அடுத்த தளத்திற்கு கொண்டுசென்றுள்ளது. 


ஈஸ்டர் தாக்குதல், கொவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி என்று அடுத்தடுத்து விழுந்த அடிகளினால் பலர் கேள்விகளுடன் பயணித்த வேளையில், தர்ஷினி கணேஷன் அத்தனை நெருக்கடிகளிலும் உள்ள வாய்ப்புக்களைத் தேடி, அதைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.

2030ஆம் ஆண்டு மிகச் சிறந்த தொழில் அதிபராக வளர்ந்து நிற்பேன் என்ற நம்பிக்கையுடன் பேச ஆரம்பித்தார்.

"நான் வவுனியா தோணிக்கல் பகுதியில் வசிக்கிறேன். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது பெரும் நெருக்கடிகள் இருந்தன. அதற்கு முன்னர், ஈஸ்டர் தாக்குதல் - கொவிட் பரவல் காலப்பகுதியில் முகக் கவசங்கள் மற்றும் புத்தக பைகளை தைத்து விற்க ஆரம்பித்தேன்.

அந்த தொழிலின் உதவியுடன் மின் தையல் இயந்திரம் ஒன்றை வாங்கினேன். தொழில் ஓரளவு வலுவானது. இருப்பினும் திருமண வாழ்க்கை குடும்ப பொருளாதாரத்தை சமாளிக்க மேலும் உழைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

அப்போது போதுமான வருமானம் கிட்டவில்லை. நாளாந்த செலவுகளை தேடிக்கொள்ளும் முயற்சி மட்டுமே இருந்தது. அவ்வாறு இருக்கும்போது தான், இருநாள் செயலமர்வொன்றில் பங்கெடுத்தேன். தொழிலில் இலாபமீட்டும் முறைகளை அறிந்துகொண்டேன். இது எனது படைப்புக்களை நுகர்வோருக்கு குறைந்த விலையில் வழங்கும் மூலோபாயத்தைக் கற்றுத் தந்தது. எமக்கு சர்வதேச சந்தையொன்று இருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன்.

டிஜிட்டல் சந்தைக்குள் எனது உற்பத்திகளை நேரடியாக கொண்டுச் சேர்ப்பதற்கான வழியும் கிடைத்தது. எம்மால் முடியும் என்ற நம்பிகை மேலீட்டுள்ளது. அதனால் ஏழுவருடங்களாக நான் செய்யும் சிறிய தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடிந்தது.

தொழில் முயற்சியாளராக மாறி எனது தெரிவுகளை இன்னும் பலருக்கு பகிர்ந்தளிக்கத் தீர்மானித்தேன். நான்கு பேருக்கு தொழில் வழங்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறேன். இலங்கையின் முன்னணி தொழில் முனைவோர் வரிசையில் இடம்பிடிக்க வேண்டும் என்ற இலக்கை இன்னும் சில வருடங்களில் எட்டிப்பிடித்துவிடுவேன்.

முன்னர் நான் குடும்பத்தை மட்டும் பராமரித்து வந்தேன். தற்போது தொழில்முனைவராக உழைத்து வருகிறேன்."

வெறுமனே நாளாந்த செலவுகளுக்காக வருமானத்தை ஈட்டும் முயற்சியில் இருந்து இன்று ஆரம்ப நிலை தொழில்முனைவராக வளர்ந்து நிற்கிறார் தர்ஷினி.

குடும்ப பொருளாதார சுமையை சமாளிப்பதற்காக பெண்கள் ஏதாவது ஒன்றை செய்துவிடலாம் என்று பல பெண்கள் பல முயற்சிகளில் ஈடுபடுவார்கள். பலர் தோற்று முயற்சியை விட்டு விடுவார்கள். சிலர் சவால்களைச் சந்தித்து வெற்றி பெறுவார்கள். அப்படி தனது கணவருக்கு தோள்கொடுத்து இன்று தொழில்முனைவராக இருக்கும் டிலோஜினியை அவரது வீட்டில் சந்தித்தோம்.

வாடகை வீட்டில் இருந்து தற்போது அவர் தனது சொந்த வீட்டிற்கு மாறியிருக்கிறார். நாம் செல்லும்போது புதிய வீட்டின் நிர்மாணப் பணிகள் சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருந்தது. தனது பணிகளை நிறுத்திவிட்டு, எங்களோட பேச ஆரம்பித்தார் தனுசன் டிலோஜினி .

''நான் வவுனியா - சமயபுரம் பகுதியில் வசிக்கிறேன். ஆரம்பத்தில் யாழ். மாவட்டச் செயலகத்தில் வழங்கப்பட்ட 10 நாள் பயிற்சிகளில் கற்றுக்கொண்டேன். பின்னர் அதனையே வாழ்வாதாரத்திற்கான தனித் தொழிலாகவும் மாற்றிக்கொண்டடேன். எனது கணவரின் வருமானம் போதுமானதாக இருக்கவில்லை. அதனால் தொழில் ஒன்றை நானே செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

பின்னர் வவுனியா பிரதேச சபையில் கிடைத்த பயிற்சியில் எனக்கு பல படிப்பினைகள் கிடைத்தது. பெண்கள் என்ற வகையில் தொழில் முயற்சியாளர் ஆவது சற்று கடினமாதாக இருந்தது. ஆனால் முயற்சியை கைவிடவில்லை. அண்மையில் நடத்தப்பட்ட இருநாள் செயலமர்வொன்றில் கலந்துகொண்டேன். எனது தொழில் முன்னேற்றத்திற்கான கடன் பெறுதல் மற்றும் தனித்துவமான அடையாளத்துடன் இன்னும் பலருக்கு இந்த அறிவைப் பகிர்வதற்கான முயற்சிகள் குறித்து அறிந்துகொண்டேன்.

எனது தொழில் வளர ஆரம்பித்துள்ளது. வாடகை வீட்டிலிருந்து சொந்த காணியில் வீடு கட்டும் அளவுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது." என்று தனது முன்னேற்றத்தை மகிழ்ச்சியோடு எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

சிறுவயதில் பெண்கள் கல்வியைத் தொடர முடியாது சந்திக்கும் சவால்கள் அவர்களை நிறையவே புடம்போடச் செய்கிறது. அப்படி சிறுவயதில் கல்வியைப் பெறுவதற்கு தடையாக இருந்த வறுமையை விரட்டி, பிள்ளைகளுக்கு ஒளியமான எதிர்காலத்திற்காக உழைக்கிறார் ஜெசிந்தா. தொழில்முனைவருக்குத் தேவையான முதலீட்டு மூலோபாயத்தை ஜெசிந்தா நன்கு அறிந்துவைத்திருக்கிறார்.

தையல் தொழிலை வாழ்வாதார தொழிலாக செய்துவரும் ஜெசிந்தா சமூக நெருக்கடியில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொண்ட அனுபவத்தை எம்மோடு பகிர்ந்துகொண்டார்.



"நாட்டின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது எனது கணவர் வேலையை இழந்தார். பலரும் பாதித்திருந்த தருணம் அது. நான் தையல் தொழிலை சிறிய அளவில் ஆரம்பித்தேன். எனது கணவரின் பண்ணை தொழில் முற்றாக முடங்கிப் போனது. அந்தச் சந்தர்ப்பத்தில் கணவர் எனது முயற்சிக்கு முழு அளவில் உதவினார். வெறுமனே ஊர் மக்களின் ஆடைகளைத் தைத்து அன்றாடம் வருமானத்தைப் பெற்றுவந்தேன்.

அட்ரா நிறுவனம் எங்களுக்கு தொழில்முனைவோருக்கான அடிப்படை விடயங்களைக் கற்றுத் தந்தது. அதனால் இந்த தையல் தொழிலை வெற்றிகரமாக செய்ய வழிவகுத்தது. குறைந்த விலையில் மூலப்பொருட்களைப் பெற்று அதில் நான் இலாபமீட்ட ஆரம்பித்தேன். நுகர்வோருக்கும் மலிவு விலையில், சிறந்த உற்பத்திகளை வழங்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளேன். உட்கட்டமைப்பு வசதிகள் எதுவுமற்ற சிறிய எமது கிராமத்திற்குள் முடங்கிக் கிடந்த எனது தொழிலை நல்ல சந்தை வாய்ப்புக்களை நோக்கி நகர்த்திச் செல்ல முடிந்துள்ளது."  

இவர்களை போலவே மற்றுமொருவர் நீர்கொழும்பில் வசிக்கும் பாத்திமா. இவரும் ஒரு தொழில் முயற்சியாளர். ஆரம்பத்தில் குடும்பப் பெண் வீட்டுக்குள் இருப்பது மட்டுமே சரியானது என்ற கடிவாலத்திற்குள் சிக்கிக்கொண்டிருந்தவர். ஆனால் இன்று அவர் நீர்கொழும்பு பிரதேசத்தின் பெண்கள் வியாபார வலையமைப்பொன்றின் பிரதான உறுப்பினர். குறிப்பாக காலை வேளையிலும் மாலை நேரங்களிலும் வீதியருகில் சிறிய கடைகளை ஆரம்பித்து உணவு பொதிகளை விற்பனை செய்யும் தொழிலை ஆரம்ப கட்டமாக முன்னெடுத்திருந்தார்.

தற்போது இயற்கை அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் குழுவாகவும் பரிணமித்துள்ளனர். தனிப்பட்ட வியாபார முனைப்புக்களுக்கு அப்பால் சென்று குழுவாக இணைந்து நெட்வேர்க் மார்க்கடிங் என்ற வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றமையே தனது வெற்றிக்கு காரணமாகியுள்ளதென கூறும் பாத்திமா, அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் தனது புதிய தொழில் முயற்சி பெருமளவில் கைகொடுத்திருந்தாக கூறினார். 


இந்த நால்வரும் கஷ்டத்தையும், தடைகளையும் மட்டும் பார்க்கவில்லை. பெண்ணாய்ப் பிறந்துவிட்டோம். சாதிக்க வேண்டியவர்கள் நாம் என்ற எண்ணத்துடன் தங்களது தனித்துவமான திறமைகளின் அடிப்படையில் தொழில்களை ஆரம்பித்து முன்னேறி வருகின்றனர். ஏனைய பெண்களுக்கும் முன்மாதிரியாக இருக்கின்றனர். வவுனியாவில் உள்ள பெண் தொழில் முனைவோர், வவுனியா பல்கலைக்கழககத்தில் வியாபார முகாமைத்துவ கற்கை நெறியையும் பகுதிநேரமாக பயின்று வருகின்றனர்.

அதேபோல், ஐக்கிய அமெரிக்காவின் அரச திணைக்களத்தின் முன்னாள் உறுப்பினர்களின் புத்தாக்க அமைப்பான ADRA வின் நிதியுதவியுடன், மகளிர் வணிக பொருளாதார மேம்பாட்டுக்கான (WE-LED) திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இருநாள் செயலமர்வில் பங்கேற்றுள்ளனர். இந்த நான்கு பெண்களும் தங்களது முயற்சிகளுக்கு அதனை மேலும் மூலதனமாக்கியுள்ளனர். நாளாந்த வருமானம் பெற்றவர்கள் தற்போது தொழில்முனைவராக பரிணமித்து வருகின்றனர்.

பல்வேறு காரணங்களினால் தாம் இழந்த கல்வி வாய்ப்புக்கள், பொருளாதார சிக்கல்கள் ஆகியவற்றை அடுத்த சந்ததி எதிர்கொள்ள கூடாது என்ற மன உறுதியுடன் தாம் அறிந்த துறைகளைத் தெரிவு செய்து, அதைக் கற்றுக்கொண்டு முன்னேறிச் செல்ல முயற்சிக்கிறார்கள். முடங்கிக் கிடக்கமால் சிறகடிக்க எத்தனிக்கும் இவர்களின் எண்ணம் ஈடேரட்டும்.

VIDEOS

RELATED NEWS

Recommended