உத்தரமேரூரில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மணிகள் மற்றும் அதை தயாரிக்கும் உலைகள் கண்டுபிடிப்பு.

லட்சுமி காந்த்

UPDATED: Dec 19, 2023, 9:37:38 AM

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூருக்கு அருகே உள்ளது கடல்மங்கலம் கிராமம்.

இந்த கிராமத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய கண்ணாடி மணிகள் அதை தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் மற்றும் அதை உருக்கும் உலைகலள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் கூறியதாவது,

உத்திரமேரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் மங்கலம் கிராமத்தில் அழிஞ்சில் காடு மற்றும் மடு ஓடை ஆகிய நீர் நிலைகளுக்கு அருகே கள ஆய்வு மேற்கொண்ட பொழுது

பல நிறங்களில் பல வடிவங்களில் முழுமையான மற்றும் உடைந்த நிலையில் பல மணிகள் கிடைத்தன.

மேலும் மணிகள் தயாரிப்பதற்கு முந்தைய நிலையில் இருக்கும் மூலப் பொருட்களும் பல நிறங்களில் மஞ்சள் ,பச்சை,நீலம் ,கருப்பு 

சிவப்பு ,ஆரஞ்சு மற்றும் கருநீலம் ஆகிய நிறங்களில் பல துண்டுகளாக மணிகள் கிடைத்தன.

அதன் அருகிலேயே மேடான பகுதியில் உடைந்த பானை ஓட்டு துண்டுகளும் சில பானை ஓட்டு துண்டுகளில் கருப்பு ,சிவப்பு, பச்சை மற்றும் கரும்பச்சை ஆகிய நிறங்களில் மெழுகு போன்ற பூச்சும் காணப்பட்டது. 

சில பானை ஓடுகளில் ஒரு பக்கமும் சில பானை ஓட்டு துண்டுகளில் இரண்டு பக்கமும் இந்த மெழுகு பூச்சி காணப்பட்டது.இவைகள் பள பள என மின்னியது. பார்ப்பதற்கு தற்பொழுதைய டைல்ஸ் போல இருந்தது.

இந்நிலையில் கீழடி மற்றும் அரிக்கமேடு அகழ்வாய்வில் கிடைத்த மணிகளோடு இங்கு கிடைத்த மணிகளை ஒப்பிட்டு பார்த்ததில் அதன் வடிவங்களோடும் வண்ணங்களோடும் அளவுகளோடும்  இங்கு கிடைத்த மணிகளும் முழுமையாக ஒத்துப் போவதை எண்ணி வியந்தோம்.

எனவே இது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை உறுதி செய்தோம்.

அதேபோல் அழிஞ்சில் காட்டிற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மேற்கு பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கு அருகே சித்தமல்லி கிராமத்திற்க்கு செல்லும் வழியில் களஆய்வு மேற்கண்ட பொழுது,

வட்ட வடிவில் பானை ஓடுகளால் எழுப்பப்பட்ட இரட்டை அடுக்கு சுவர் அமைப்பு கொண்ட ஒரு முழு உலை போன்ற அமைப்பையும் அதன் அருகிலேயே மேடான பகுதிகளில் சிதைந்த நிலையில் இதுபோன்ற சில உலைகள் இருப்பதையும் கண்டறிந்தோம்.

இவ்விடத்தின் அருகிலேயேயும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய மணிகள் முழுமையாகவும் உடைந்த நிலையிலும்  மணிகள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களின் துகள்கள் கிடைத்தன.

மேலும் பானை ஓட்டு துண்டுகள் மெழுகு பூச்சியுடன் கூடியதாகவும் ஆங்காங்கே இருந்தன.

உரை கிணறு போன்ற வட்ட வடிவில் காணப்பட்ட முழுமையான உலையானது மூன்றறை அடி நீளம் மூன்றறைஅடி அகலம் கொண்டதாக இருந்தது.

இதை ஆய்வு செய்த சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் இது கண்ணாடி மணிகள் உற்பத்தி செய்யும் உலைகள் என்பதும் இவைகள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதையும் உறுதி செய்தனர்.

மேலும் இப்பகுதியில் மிகப்பெரிய மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலை  இயங்கி இருக்க வாய்ப்புள்ளது என்பதை உறுதிசெய்ய முடிகிறது.

இச்சான்றுகள் தமிழர்களின் நகர நாகரீக பண்பாட்டு அடையாளத்தின் மைல்கல் எனவும் கூறலாம்.

கீழடி மற்றும் அரிக்கமேடு ஆகிய இடங்களில் கிடைத்த இதே மாதிரியான மணிகளாக இருந்தாலும் அதை தயாரிக்கும் உலைகள் அங்கு இதுவரை கண்டறியப்பட்டதாக தெரியவில்லை . அதனால் இந்த இடம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்பட வேண்டியுள்ளது.

ஏற்கனவே இந்த பகுதிக்கு அருகில் உள்ள மலைகள் மற்றும் குன்றுகளில் பெருங்கற்கால மனிதர்களின் நினைவுச் சின்னமான கல்வட்டங்கள் மற்றும் கல் திட்டைகளை நாங்கள் கள ஆய்வில் கடந்த காலங்களில் கண்டறிந்திருக்கிறோம்.

மேலும் இப்பகுதிக்கு அருகிலேயே புதிய கற்கால மனிதர்களின் ஆயுதங்கள் மற்றும் அதை பட்டை தீட்டும் இடங்களையும் கண்டறிந்துள்ளோம்.

அதேபோல் தற்பொழுது சங்க காலத்திற்கு முற்பட்ட கண்ணாடி மணிகளையும் அதை தயாரிக்கும்  உலைகளையும் கண்டறிந்துள்ளோம்.

உத்திரமேரூர் ஆலயங்களில் பல்லவர்கள் சோழர்கள் விஜய நகர நாயக்க மன்னர்களின் கல்வெட்டுக்கள் வரலாற்று ஆவணங்களாக உள்ளன. 

இதன் மூலம் இந்த உத்திரமேரூர் பகுதியில் பெருங்கற்காலத்தில் இருந்து தற்போது வரையிலான தொடர்ச்சியான வரலாற்றுத் தடயங்கள் கிடைத்துள்ளது என்பது சிறப்பு மிக்கதாக உள்ளது.

இதன் மூலம் இப்பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்விடமாக இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்ய முடிகிறது.

மேலும் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சிறந்த தொழில்நுட்பங்களோடு தொழிற்சாலைகளை அமைத்து நகர நாகரிகத்தோடு சீரும் சிறப்புமாக வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதற்கு இது முக்கிய சான்றாகும்.

எனவே இதை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து தமிழக அரசும் தொல்லியல் துறையும் உரிய கவனம் செலுத்தி அகழ்வாய்வு மேற்கொண்டால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் நமக்கு கிடைக்கும் என நம்புகிறோம் என கொற்றவை ஆதன் தெரிவித்தார்.

பேட்டி. கொற்றவை ஆதன் உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர்.

VIDEOS

Recommended