- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய்களை பெருக்கும் வகையில் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய்களை பெருக்கும் வகையில் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு.
ராஜா
UPDATED: May 10, 2024, 7:17:40 PM
தமிழகம் முழுவதும் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி வருகிறது.
இதன் காரணமாக நீர் நிலைகளில் இருந்த தண்ணீர் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது.
குறிப்பாக வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களில் நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை உள்ளதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.
இதன் காரணமாக ராமநாதபுரம் சிவகங்கை மதுரை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக, கண்மாய்களில் நீரை தேய்க்கும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று அந்த மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.
அந்தக் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ராமநாதபுரம் சிவகங்கை மதுரை மாவட்டங்களுக்கு மூன்று கட்டங்களாக தண்ணீர் திறக்கவும் உத்தரவிடப்பட்டது.
முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட தண்ணீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து இன்று காலை 10 மணிக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையின் சிறிய மதங்களில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது.
வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் ஆற்றுப் படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல் ஐந்து நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், இரண்டாம் கட்டமாக சிவகங்கை மாவட்டத்திற்கும் மூன்றாம் கட்டமாக மதுரை மாவட்டத்திற்கும் என மொத்தமாக 15 நாட்களில் வைகை அணையில் இருந்து 1500 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
வைகை அணையின் தற்போது நீர் இருப்பு 2,995 மில்லியன் கன அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.