கிராம சபை கூட்டம் ஜூனில் நடத்த தமிழக அரசு முடிவு.

அஜித் குமார்

UPDATED: Apr 30, 2024, 8:15:47 PM

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மே 1ல் நடக்க வேண்டிய கிராம சபை கூட்டத்தை, ஜூன் மாதம் நடத்த, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனைத்து ஊராட்சிகளிலும், ஜன., 26 குடியரசு தினம்; மார்ச் 22 உலக தண்ணீர் தினம்; மே 1 தொழிலாளர் தினம்; ஆக., 15 சுதந்திர தினம்; அக்., 2 காந்தி பிறந்த நாள்; நவ., 1 உள்ளாட்சிகள் தினம் ஆகிய ஆறு நாட்களில், கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.

இக்கூட்டங்களில், ஊராட்சி வரவு, செலவு கணக்கு சமர்ப்பிக்கப்படும். அரசு திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். மக்கள் தங்கள் ஊராட்சியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து கோரிக்கைகள் வைப்பர். அதன் அடிப்படையில், தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், வரும் மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும், வழக்கமான முறைப்படி கிராம சபை கூட்டம் நடத்த தடையில்லை.

எனவே, கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என, சமூக நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், அரசு தரப்பில் கிராம சபை கூட்டம் தொடர்பாக, எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், கிராம சபை கூட்டத்தை நடத்த, தேர்தல் கமிஷனிடம் தமிழக அரசு அனுமதி எதுவும் கோரவில்லை.

ஏனெனில், மே 1ல் நடத்த வேண்டிய கிராம சபை கூட்டத்தை, ஜூன் இரண்டாவது வாரத்தில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது' என்றனர்.

 

  • 9

VIDEOS

Recommended