• முகப்பு
  • education
  • "நான் முதல்வன்" என்ற திட்டத்தின் கீழ், "கல்லூரிக் கனவு" என்ற நிகழ்ச்சியை. அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

"நான் முதல்வன்" என்ற திட்டத்தின் கீழ், "கல்லூரிக் கனவு" என்ற நிகழ்ச்சியை. அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

TGI

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பாக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் “நான் முதல்வன்” திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படும் “கல்லூரி கனவு” திட்டத்தின் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், இன்று (30.06.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திரு.சி.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு மாணவ, மாணவியரும், இளைஞர்களும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் முதல்வர்களாக உருவாக வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், மாணவ-மாணவிகளின் திறன்மேம்பாட்டினை மேம்படுத்தும் வகையில் “நான் முதல்வன்” என்ற திட்டத்தை செயல்படுத்தினார்கள். தற்போது அத்திட்டத்தின் ஒரு பகுதியாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டும் வகையில் கல்லூரி கனவு என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும், இதுபோன்ற திட்டம் கிடையாது என்று சொல்லுமளவிற்கு பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மாணவ-மாணவிகளுக்கு தனி திறமையை வளர்க்கின்ற வகையில், சிறப்புமிகு திட்டமாக “நான் முதல்வன்” திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டப்பணிகள் முதலமைச்சரான தன்னுடைய நேரடி பார்வையில் இருந்தால்தான் இன்னும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களே இத்திட்டத்தை கண்காணித்து வருகிறார். அதன் அடுத்த கட்டமாகத்தான் பணிரெண்டாம் வகுப்பிலே தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழிகாட்டுகின்ற நிகழ்ச்சியாக “கல்லூரி கனவு” என்ற நிகழ்ச்சியும் துவக்கி வைத்திருக்கிறார்கள். பள்ளிக் கல்வி முடித்த பிறகு, அடுத்து என்ன படிக்கவேண்டும் என்று தெரிந்து கொள்வதற்கு நம்முடைய பெற்றோர் கல்வியறிவு பெற்றிருந்தால் அவர்களிடத்தில் கேட்போம், இல்லையென்றால் மற்றவர்களிடம் அல்லது ஆசிரியர்களிடம் கேட்போம், ஆனால் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி கூடுதலாக வளர்ந்து வரும் சூழலில் புதிய புதிய பாடத்திட்டங்கள், கல்விமுறைகள், வந்து கொண்டிருப்பதால் எல்லோருக்கும் வழிகாட்டுவதற்கு ஏதுவாக அரசே ஒரு கல்லூரி கனவு திட்டத்தை உருவாக்கியுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கும் பயன்படுமளவிற்கு இத்திட்டம் உருவாக்கப்பட்டது. மாணவர்கள் எதிர்காலத்தில் என்ன படிக்கலாம், என்ன வேலைக்கு செல்லலாம் என்ற தெளிவினை மாணவர்களிடத்திலே ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கல்லூரி கனவு என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வழிகாட்டி கையேடு வழங்கப்படுகின்றது. இந்த கையேட்டில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இத்திட்டத்தின் பயன்கள் பற்றி கூறியுள்ள வாசகங்கள் இடம்பெற்றுள்ளதை மாணவர்கள் படித்து அறிந்துகொள்ளவேண்டும். “கல்விதான் எதிர்கால பாதைக்கு வழி, நம்மை அழிக்க நினைப்பவர்களை எதிர்கொள்ளும் ஆயுதம் என்பதை உணர வேண்டும். ” 2006ஆம் ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தபோது அரியலூர் மற்றும் பெரம்பலூர் இணைந்த ஒரே மாவட்டமாக அமைந்திருந்தது பெரம்பலூர் மாவட்டம். அப்போது பத்தாம் வகுப்பில் தேர்ச்சியில் நம்முடைய பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் கடைசி மூன்று இடங்களில் இருந்தது. அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஏராளமாக காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டது. பல பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் விளங்கியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் மாநிலத்தின் இரண்டாம் இடம் பிடித்துள்ளோம். பதினோராம் வகுப்பு தேர்ச்சியிலும் பெரம்பலூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது. ஒரே வருடத்தில் இந்த மூன்று சாதனைகளையும் நிகழ்த்திக் காட்டிய பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைக் கல்வி அலுவலர், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த திட்டத்தினை மாணாக்கர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். பொறியியல், மருத்துவம், வணிகவியல், கலை மற்றும் அறிவியல் போன்ற உயர்கல்வி படிப்புகள் மற்றும் அதனைச் சார்ந்த வாய்ப்புகள் சம்பந்தமாகவும் மாணவ, மாணவியரின் அனைத்து வித சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் வகையில் இன்று ஒரு நாள் முழுவதும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. பொறியியல் படிப்பு குறித்து இந்திய தொழில்நுட்ப நிறுவன (IIT) பேராசிரியர்களும், கலை, அறிவியல் மற்றும் வணிக படிப்புக் குறித்து துறை வல்லுநர்களும் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே உரையாற்றினார்கள். மேலும் தமிழகம் மற்றும் அகில இந்திய அளவில் புகழ் பெற்ற பல்வேறு கல்லூரிகள், அதன் புதிய பாடத்திட்டங்கள், அதில் சேர்வதற்கான தகுதிகள் போன்ற அனைத்து விவரங்களையும் மாணவ, மாணவியர் நேரடியாக பெற்று எளிதில் பயன்பெறும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் திரு.ஹரிபாஸ்கர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அறிவழகன் , தனலெட்சுமி சீனிவாசன் கல்லுாரி மேலாண்மை இயக்குநர் திரு.மணி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.பெ.ஜெகநாதன் மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.

VIDEOS

RELATED NEWS

Recommended