கும்பகோணம் வந்த புதிய விருந்தாளி மும்பை ரயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாரிமுத்து

UPDATED: May 28, 2023, 5:28:01 PM

தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் இருந்து மும்பை நகரத்திற்கு நேரடி ரயில் வசதி வேண்டும் என்று பல ஆண்டுகளாக ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தக் கோரிக்கையை வர்த்தக அமைப்புகளும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதேபோல் தூத்துக்குடியில் இருந்து டெல்டா மாவட்டத்திற்கு நேரடி ரயில் தொடர்பு வேண்டும் என அம்மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதை அடுத்து மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்திலிருந்து பூனே, ரேணிகுண்டா, திருத்தணி, காஞ்சிபுரம், சிதம்பரம், கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், மதுரை வழியாக தூத்துக்குடிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.

அந்த சிறப்பு ரயில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மும்பையில் புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை தூத்துக்குடி சென்றடைந்தது. மறு மார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து நேற்று(ஞாயிறு) காலை 9.45 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்திற்கு மாலை 5.10 மணிக்கு வந்தடைந்தது.

கும்பகோணத்திற்கு வந்த புதிய விருந்தாளியான மும்பை ரயிலுக்கு ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் மற்றும் வர்த்தகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம். பி ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்பு ரயிலை இயக்கி வந்த ரயில் ஓட்டுநர்கள் மனோகரன், சுகன் மற்றும் ரயில் வண்டி மேலாளர் சேரன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் அதன் மாவட்டத் தலைவர் சதீஷ் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் புதிய ரயிலுக்கு வரவேற்பு அளித்து ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் ஏ. கிரி, உறுப்பினர்கள் நடராஜகுமார்,  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் இந்த சிறப்பு ரயில் மும்பைக்கு புறப்பட்டு சென்றது. 

தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருத்தணி, ரேணிகுண்டா மற்றும் மும்பைக்கு நேரடியாக செல்ல வசதியான இந்த சிறப்பு ரயில் இயக்கத்தை நிரந்தரமாக்க ஆவண செய்ய வேண்டும் என எம். பி ராமலிங்கத்திடம் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended