• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை போக்குவரத்துதுறை அமைச்சர் திறந்து வைத்தார்.

ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை போக்குவரத்துதுறை அமைச்சர் திறந்து வைத்தார்.

ரமேஷ்

UPDATED: May 8, 2023, 1:18:42 PM

கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல தலைமை அலுவலகத்தில், தமிழகத்திலேயே முதன்முறையாக, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஒரே நேரத்தில் 150 பேர் ஓய்வெடுக்க முடியும். இதை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தொழிற்சங்கத்தினர் சார்பில் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக அரசின் ஈராண்டு சாதனையில், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் என்பது, 21,000 அரசுப் பேருந்துகளை வைத்துக் கொண்டு எப்படி தமிழகத்தில் மட்டும் சிறப்பாக செயல்படுத்த முடிகிறது என இந்திய அளவில் பல்வேறு மாநிலப் போக்குவரத்து துறை அமைச்சர்களால் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத் தேர்தலில் கூட இத்திட்டம் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டு, நேற்று வரை 280 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.

சராசரியாக நாள் ஒன்றுக்கு, இத்திட்டத்தில் 40 லட்சம் மகளிர் பயணம் செய்கிறார்கள். இதன் மூலம் பெண் ஒருவருக்கு மாதம் தோறும் ரூ.888 அளவிற்கு செலவு மிச்சப்படுகிறது.

போக்குவரத்து தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு மாநிலம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட திட்டமிட்டு வருகிறோம். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் ஒன்று கூட நிரப்பப்படாத நிலையில், தற்போது இதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெற பிரத்யேக மென்பொருள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது நடைமுறைக்கு வர சுமார் 3 மாதங்கள் வரை ஆகும்.

சில நேரங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கடைசி நேரத்தில் பணிக்கு வராமல் இருப்பதால், மக்களுக்கான போக்குவரத்து சேவையினை நிறுத்தாமல் இருக்க, தேவையான இடங்களில் மட்டும் அவுட்சோர்சிங் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கொடைக்கானலில் உள்ளது போன்ற சேவை, கும்பகோணத்தில் இருந்து நவக்கிரக ஸ்தலங்களை இணைக்கும் பேருந்து வசதி, புதிதாக கொண்டு வரப்படும். 2,000 பேருந்துகள் வந்த பிறகு நடைமுறைப்படுத்தப்படும்.

நடத்துநர், ஓட்டுநர்கள், பிற ஊழியர்கள் என 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். எனவே, போக்குவரத்துக் கழகங்களில் அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே வாக்குவாதங்கள், சிறு சிறு தகராறுகள் ஏற்படுவது இயல்பு.

எனினும், அவை வராமல் தடுக்க பணியிட மாறுதல், பணியிடை நீக்கம் ஆகிய நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுகிறது" என்றார்.

VIDEOS

RELATED NEWS

Recommended