ஆடம்பரம் அவதி தரும்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

🌹மலரும் நினைவுகள்🌹 அன்றாடம் வளர்ந்து வரும் அறிவியல் மனிதனை ஆடம்பர வெறியனாக மாற்றி விட்டது. ஆடம்பர வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தவர்களை விட அதனால் அழிந்து போனவர்கள் தான் அதிகம். ஓவ்வொரு செயலும் மனித வாழ்க்கையில் அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பதில் எந்தத் தடையுமில்லை. அது ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்ற போது தான் அழிவுப்பாதை ஆரம்பமாகின்றது. மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. ஆடம்பரமாக விழா நடந்தது. அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்குப் பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையில் உள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு? என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர். தெனாலிராமன் பொட்டலத்தைப் பிரித்தான் அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்று இருந்தது. அவையினர் கேலியாகச் சிரித்தனர். அரசர் , “”ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?” எனக் கேட்டார். “”அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளியமரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்தப் புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும் போல இருங்கள்!” என்றான். அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தை விட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி,”ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை தான். ”பொக்கிஷப் பணமும், பொதுமக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே என் பிறந்தநாள் விழாவை நிறுத்துங்கள். இனி என் பிறந்த நாளன்று வறுமையில் வாடும் ஆதரவற்ற ஏழைகள், வயோதியர்ளுக்கு மூன்று வேலை அன்னதானம் செய்யுங்கள். வீர விளையாட்டை நடத்துங்கள்.. வெற்றி பெற்றவர்களுக்கு பொன்னும்,பொருளும் கொடுங்கள். அவசியம் இல்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக் கூடாது,” என உத்தரவும் இட்டார். ஆம்.,நண்பர்களே.. தகுதிக்கு மீறி ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் பின் ஒருநாள் நிம்மதி இழப்பார்கள். ஆடம்பர வாழ்க்கை வாழ்பவனின் செல்வம் எல்லாம் சூரிய ஒளியின் முன் மாயும் மூடுபனியைப் போல மறைந்து விடும். நமது தகுதிக்கு உட்பட்டு, எளிமையாக வாழ்ந்து விட்டால் மனநிம்மதியுடன் வாழலாம்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended