• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • 102 நில அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு 90 நாட்களுக்கு நில அளவைப் பயிற்சி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

102 நில அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு 90 நாட்களுக்கு நில அளவைப் பயிற்சி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

சுரேஷ்பாபு

UPDATED: May 23, 2023, 8:50:34 PM

திருவள்ளூர் மாவட்டம், கொழுந்தலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ள 102 நில அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை சார்பாக 90 நாட்களுக்கு நடைபெறவுள்ள நில அளவைப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, தலைமையுரையாற்றி, ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி பேசினார்.

வருவாய்த் துறையை பொருத்தவரைக்கும் உட்பிரிவு பட்டா வழங்குவது என்பது ஒரு சாதாரணமாக நடக்கக்கூடிய நிகழ்வாக இருந்தாலும் அப்பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது நில அளவையர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததை அரசு கண்டறிந்து அதனை உடனடியாக நிவர்த்தி செய்யும் பொருட்டு தேர்வாணையத்தால் ஒரே முறையாக தேர்வு நடத்தப்பட்டு அதன்மூலம் தமிழகம் முழுவதும் 922 நில அளவையர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

தற்பொழுது மூன்று நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய நில அளவையர்களை ஒன்றிணைத்து ஒரே இடத்தில் 90 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அதில் ஒரு பகுதியாக, தான் நமது திருவள்ளூர் மாவட்டத்திலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை ஒன்றிணைத்து ஒரே பயிற்சியாக இன்று முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன். அது மட்டுமல்ல, திருவள்ளூரை சார்ந்த நில அளவையர்கள் முன்னதாக என்னை சந்தித்த போது, நான் தெரிவித்த தகவலைத்தான் இப்பொழுதும் சொல்கிறேன் நில அளவையர்களாக சிறிய வயதிலேயே வருவாய்த் துறையில் இணைந்து சமுதாயத்திற்கு நேரடியாக சேவை செய்யக்கூடிய ஒரு வாய்ப்பாக உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

பின்னர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ள 102 நில அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை சார்பாக நில அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு பயிற்சி கையேடுகளை இலவசமாக வழங்கினார்.

இதில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் மை.ஜெயராஜ பௌலின், நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர்கள் எம்.ஆர்.குமாரவேலு (திருவள்ளூர்), நாகராஜ் (செங்கல்பட்டு), கோட்ட ஆய்வாளர் இராஜகுமார்,தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றினைப்பின் மாநில செயலாளர் பேபி,

திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆர். எம். செந்தில் குமரன்,காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் லோகநாதன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பிரதீப், திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் தாலிப்,பொன்னேரி கோட்ட தலைவர் குமரன், பயிற்றுநர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended