• முகப்பு
  • aanmegam
  • நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிட்டு ஆண்கள் மட்டுமே பங்கு பெற்ற கோவில் திருவிழா!

நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிட்டு ஆண்கள் மட்டுமே பங்கு பெற்ற கோவில் திருவிழா!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆணையூரில் கரை முனியப்பசாமி கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை காவல் கொடுக்கும் விழா நடைபெறும். சுண்டக்காம்பட்டி, கருமகவுண்டம்பட்டி, ஆணையூர் உள்ளிட்ட 3 கிராம ஊர் நாட்டாண்மைகள் முன்னிலையில் கிராம மக்கள் சார்பில் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வு என்பது காவல் கொடுக்கும் நிகழ்வு தான். மக்கள் தங்கள் வேண்டுதல்கள் கோவிலில் வைத்து விட்டு செல்வார்கள். வேண்டுதல் நிறைவேறிய பின் குட்டியும் – முட்டியும் தருவதாக ஐதீகம். அதன்படி வேண்டுதல் நிறைவேறிய பின் பக்தர்கள் தாங்கள் வசிக்கும் பகுதி எதுவானாலும் அந்த பகுதியில் ஆடுகளை வாங்கி கோவிலுக்காக நேர்ந்து விட்டு விடுவார்கள். பின்னர் திருவிழாவின் போது ஆடுகளை பிடித்து வந்து கோவிலில் விட்டுவிடுகின்றனர். அப்படி இந்த ஆண்டின் திருவிழா கடந்த செவ்வாய்கிழமை சகுணம் கேட்கப்பட்டு சுவாமி அனுமதி கிடைத்த உடன் அன்றைய தினமே காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கிய நிலையில் நேற்று நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதன் பின்னர் ஒரு ஆட்டை கரை முனியப்பனுக்கு பலியிட்டு எரிசோறு கொடுக்கும் நிகழ்ச்சி நள்ளிரவு நடைபெற்றது. அப்போது மின் விளக்குகள் அணைக்கப்பட்டு அனைவரும் அமைதியாக இருக்கும் நிலையில் குறிப்பிட்ட எல்லை பகுதிக்கு சென்ற பூசாரிகள் முனியப்பனுக்கு எரிசோறு கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மக்கள் நேர்த்திக்கடன் நிறைவேறியதற்காக கொண்டு வந்து விடப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் இரவு தொடங்கி அதிகாலை வரை பலியிடப்பட்டது. பின்னர் ஆடுகளின் கறியை வெட்டி சமையல் செய்யும் பணியை மேற்கொண்டனர். இந்த திருவிழாவில் ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் சமையலுக்கு தேவையான அனைத்து பணிகளிலும் ஆண்களே தீவிரமாக ஈடுபட்டனர். வரிசையாக அமர்ந்து கறி வெட்டும் பணியும், நீண்ட வரிசையில் அடுப்புகள் வைக்கபட்டு சமையல் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு லட்சக்கணக்கான செலவில் அன்னதானம் தயார் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சிறப்பு வழிபாடுகள் எல்லாம் முடிவு பெற்ற பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலை துவங்கிய அன்னதானம் மாலை வரை நீண்டதால் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் சிறுவயது பெண் குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்த பெண்கள் மட்டும் இந்த அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு சாப்பிட்டுச் சென்றனர். இந்த திருவிழாவில் சுண்டக்காம்பட்டி, கருமகவுண்டம்பட்டி, ஆணையூரைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமல்லாது மணப்பாறை சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இரவு நடைபெறும் வழிபாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் ஆண்கள் மட்டுமே செய்கின்றனர் பெண்களுக்கு சுவாமியை வழிபட மட்டுமே அனுமதிக்கின்றனர். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழாவின்போது மட்டும்தான் முனியப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது மற்ற நாட்களில் எந்தவித சிறப்பு வழிபாடும் நடத்துவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டி : 1. சிபி சக்ரவர்த்தி, கோவில் வழிபாட்டுக்காரர். கருமகவுண்டம்பட்டி. 2. குணசீலன், ஒன்றியக்குழுத் தலைவர் வையம்பட்டி.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended