மாணவச் செல்வங்களே வேண்டாமே ஆசிரியப்பணி

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வேண்டாமே ஆசிரியர்பணி. அன்பு மாணவச் செல்வங்களே அவணியில் ஆயிரம்பணிகள் உண்டு. ஆசிரியர் பணி வேண்டாமின்று. அகிலத்தின் ஆதாரமது என்றும், ஆகாயம்போன்று அதிசயமானதென்றும், அன்னையாய் மதிப்பு மிக்கது என்றும், அனைவரும் வணங்கும் ஏற்றமானது என்றும், ஆயிரம் கதைகள்சொல்லுவர். அதைநம்பி ஏமாந்து விடாதே அதல பாதாளத்தில் விழுந்துவிடாதே. ஆதிபகவன் பிள்ளை சொன்னாலும்நம்பாதே. ஆசிரியர் நான் சொல்கிறேன் வேண்டாம் ஆசிரியப்பணி. தொகுப்பூதியத்தில் குடும்பம் தொலைந்தே போகும். பகுதி நேரத்தில் பந்தங்கள் பறந்தே போகும். பாவம் ஆசிரியர் பணி. ஆணவத்தின் அடையாளமாய் மாணவர்களும் ஆணையிடும் அரக்கராய் அதிகாரவர்க்கமும் ஆட்டுவிக்கும் பெற்றோர்கூட்டமும். ஆசிரியரை கேலிப்பொருளாக்கும் ஆணவ அரக்கர்கள் கூட்டம். இதில் அரசியல்வாதிகளும் கூட்டணி. படியாத பிள்ளைக்கு பாடமெடு பண்பில்லாதவனிடம் பணிந்துபோ !! அடிதடி செய்பவனை அரவணைத்துச்செல் ! எழுதத்தெரியாதவனை எழுத்தாளர் என புகழ். ஆணவம் கொண்டவனிடம் அன்புசெலுத்து இப்படித்தான் கல்வித்துறையும், கல்வி நிறுவனங்களும், கைவிலங்கு போட்டு, உன்னை ஆசிரியனாய் அழகுபார்க்கும் . உன்னை பாதுகாக்கவும் உன் உரிமைகளை உறுதிப் படுத்தவும் உனது உன்னதங்களைபோற்றவும் ஒருவரும் முன்வரமாட்டார்கள். தவறிச்செய்த தவறையும், திருந்தக்கொடுத்த தண்டனையையும், கொடுங் கொலைக்குற்றமெனக் கருதி நீதி மன்றங்களும் ஊடகமும் ஓயாது ஒப்பாரிவைத்து, உன்னை ஒதுக்கிவைக்கும். ஓலமிட்டு அழச் செய்யும் உன்னை. இனிய நிகழ்வுகளையும், இன்னல்களையும் எடுத்துரைக்க இன்றைய ஏடுகளுக்குப்பிடிக்காது. இல்லாத பொய்களையும், நடவாத நிகழ்வுகளையும், இயல்புக்கு ஒப்பாமல்நிதம் ஒப்புவிப்பர். ஈசனுக்கு இணையானவனென்று இணைவைத்தவனை, ஈனப் பிறவி என எண்ணுமளவிற்கு ஈவு இரக்கம் இன்றி புனைந்தெழுதுவர். வள்ளுவன் வழிநீ நடந்தாலும், வம்பிற்கு வந்துநிற்பான் வழியில் அரக்கர் கூட்டம். தொல் காப்பியன் சொல்படி நீநடந்தாலும், தொல்லைத்தருவதையே தயங்காமல்செய்வான். ஒழுக்க முடையவனாயிரு என்றால் ஒப்பாரிவைப்பான் கை ஓங்க நினைத்தாலே ஒழிககோஷமிடுவான். ஊடகத்தை கூட்டி ஒப்பாரிவைப்பான். நடத்தையில் சந்தேகமென்பான். நடந்ததைச்சொல்ல மாட்டான். அரசுப்பணியென்றாலும் அவதிகள் அதிகம் என்றாலும் சம்பளமுண்டு. தனியார் பணியென்றால் அனைத்துப்பணியாளனும் நீதான், ஊதியமா, மூச்சுவிடலாம் பெரிதாக. அன்பு மாணவச் செல்வங்களே ஆயிரம் வேலைகள் அவணியில் உண்டு. அதிலொன்றை அடைந்திடு ஆனந்தமாய்வாழ்ந்திடு. ஆசிரியர் பணி மட்டும் வேண்டவே வேண்டாம். ஆயிரம் பணிகள் உண்டு அவணியில். ***அனுபவஸ்தன்***

VIDEOS

RELATED NEWS

Recommended