ஆசிரியர் பணி அல்ப பணி அற்பணி

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

என்னதான் நடக்கிறது தமிழ்நாடு முழுவதும் அரசின் பள்ளிகள் திறந்து, ஜீன் மாதமும் நிறைவடைந்து, ஜீலை பிறந்து விட்டது. ஆனால் இன்னும் சீருடைகள், பாடக்குறிப்பேடுகள், காலணிகள், புத்தகப் பைகள், என எதுவும் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்படவில்லை. குறிப்பாக புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் கூட வழங்கப்படவில்லை. மற்றவை தாமதமானாலும் பாடக் குறிப்பேடுகளையாவது ( notes) இந்நேரம் வழங்கியிருக்க வேண்டும். ஒரு மாதகாலமாக புதிய மாணவர்களுக்கு புத்தகமுமில்லை, குறிப்பேடுகளுமில்லை. மொத்தக் குழந்தைகளுக்கும் பாடக்குறிப்பேடுகள் அறவே இல்லை. இவை எதுவுமில்லாமல் எப்படி கல்வி கொடுப்பது? எங்கிருந்து தரம் கொடுப்பது? இவை பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கின்றது. அரசுப்பள்ளிகளில் ஆங்காங்கே ஆசிரியர்களின் உழைப்பின் பயனாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகள் சாதித்துக் காட்டியிருக்கின்றன. ஆனால் மாணவர்களைச் சேர்த்துக் கூடுதல் பணியிடங்களோடு, ஆசிரியர்கள் நியமனத்திற்காக காத்திருக்கும் பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் இந்நேரம் ஆசிரியர்களை நியமித்திருக்க வேண்டாமா? இல்லம் தேடிக் கல்வி என்னும் முறைசாரக் கல்விக்கு 1,81,000 நபர்களை நியமித்த அரசுக்கு, பள்ளிகளில் நடைபெறும் LKG,UKG க்கு 5,000 பேரை நியமிப்பதில் என்ன சிரமம் வந்துவிடப்போகிறது? இல்லம் தேடிக் கல்வியிலிருந்தே விருப்பப்பட்ட 5,000 நபர்களை LKG, UKG க்கு நியமனம் செய்யத் திட்டமிடலாமே? பள்ளிகள் திறந்து ஒருமாதம் ஆனபிறகு, தனியார் பள்ளிகளில் எல்லோரும் சேர்ந்தபிறகு, LKG, UKG குறித்த சேர்க்கைக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. LKGக்கு ஆசிரியர்கள் நியமனம் கிடையாது. ஆசிரியர்களை நியமிக்கச் சொன்னால் ஆயாக்கள் பாடம் நடத்துவார்கள் என்கிறார்கள். ஆனால் எது நடந்தாலும் தலைமை ஆசிரியர்தான் பொறுப்பு என்னும் பொறுப்பற்ற உத்தரவு.. அரசாங்கம் தன் ஊழியர்களுக்குச் செய்யும் கடமைகளிலிருந்து விலகிநிற்பது, அதனை வழிநடத்தும் அதிகாரிகளுக்குத் தெரியாமலா இருக்கும்! அரசை அசைத்துப் பார்க்கும் திட்டம் ஒருவேளை அதிகாரிகளுக்கு இருக்குமோ என்னவோ? ஆசிரியர்களுக்கு ஆணைகள் மட்டுமே அனுப்பிக் கொண்டிருக்காமல், அவர்களது பிரச்சினைகளுக்குக் கொஞ்சம் காதுகொடுப்பதே கல்வியைக் காக்கும். ஆசிரியர்கள் ஊதியம் கேட்டுப் போராடவில்லை. DA கேட்டுக் கொந்தளிக்கவில்லை. Surrender கேட்டுச் சண்டையிடவில்லை. இத்தனைக்கும் சங்கங்கள்கூட, அரசிடம் surrender ஆகி விட்டன. ஆசிரியர்கள் கேட்பது, பள்ளியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர்களை உடனே நியமனம் செய்யுங்கள். ஏற்கனவே பணி அமர்த்திய பகுதி நேர ஆசிரியர்கள் படாத பாடு படும் போது மேலும் தொகுப்பூதிய ஆசிரியப்பணியா? பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யுங்கள் என்றுதான் கேட்கின்றனர். அரசுப் பள்ளிகளை நம்பிச் சேர்ந்த பல லட்சம் குழந்தைகளுக்கு எப்பொழுது ஆசிரியர்களை நியமிப்பீர்கள் எனக் கேட்கின்றனர். காலிப்பணியிடங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு பெற்றவர்களை நேரடியாக அரசே தொகுப்பூதியத்தில் நியமிப்பதில் அரசுக்கு ஏன் இத்தனை தயக்கம்? அரசே நியமித்தால் வரும்நாளில் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டியிருக்கும் என்றால், தொகுப்பூதியத்திலேயே பணிபுரிய ஆசிரியர் பணி என்ன கொத்தடிமைப் பணியா? 60 ல் ஓய்வு பெறும் ஒருவருக்கு, பணம் கொடுக்க யோசித்து, பணி நீட்டிப்பு என்னும் பெயரில் 61 வரை நீட்டிப்பு நியாயமா? அடுத்த ஆண்டு மத்திய அரசுக்கு இணையாக 62 என மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.. அரசுப் பள்ளிகளைப் பெருமையாக வைத்திருக்க ஆசிரியர்கள் தயார்தான்! அரசு தயாரா? என்பதுதான் கேள்வி. கலைஞர் மாடலில் கம்பீரமாய் இருந்த ஆசிரியர்கள், திராவிட மாடலில்* திணறிக் கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை. குறிப்பு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் Spoken English பயிற்சி என்னும் பெயரில் ஒரு பயிற்சியை வழங்கியிருக்கின்றது கல்வித்துறை. இதனைவிட மோசமான பயிற்சியை தங்களது பணிக்காலத்தில் கண்டதில்லை என ஆசிரியர்கள் புலம்பித் தீர்த்தது அதிகாரிகளின் காதுகளில் விழுந்ததா என அறியவில்லை.. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended